யுத்தம் செய் படம், போன வாரம்தான் கத்தாரில் வந்தது, நானும் வலையில் இந்த படத்தை பார்க்கக்கூடாதுன்னு உறுதியோடு இருந்து, ஒருவழியா வெள்ளிகிழமை படம் பார்த்தேன்....மிகவும் ரசித்தேன். ரொம்ப நாள் ஆச்சி இந்த மாதிரி ஒரு த்ரில்லர் கதையை எந்தவித ஹீரோயிசமும் இல்லாமல் பார்த்து. படம் துவங்கியதிலிருந்து ஒரு வித அமைதியாகவே கொஞ்சம் கொஞ்சமாய் மெதுவாய் கதைக்குள் இழுத்து செல்லப்படுகிறோம்
JKஎன்ற சிபிசிஐடி அதிகாரியிடம், நகரெங்கும் மக்கள் புழங்கும் இடங்களில்
அட்டைபெட்டியில் கிடத்தி வைக்கபட்டிருக்கும் வெட்டப்பட்ட மனித கைகள் பற்றி துப்பு துலக்க கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே காணாமல் போன தன் தங்கையை காணாது சோகத்திலும், தன் துறை மீதிருக்கும் வெறுப்பினாலும் JK இந்த கேசை எடுக்க மறுக்கிறார். பின்பு ஒருவழியாக உயரதிகாரி தன் தங்கையின் கேசை மறுபடியும் எடுக்க வாக்குறுதி அளித்தபின், JK அவருக்கு கொடுக்கப்பட்ட ரெண்டு துணை அதிகாரிகளுடன் களத்தில் இறங்குகிறார். பின் மெல்ல மெல்ல ஒவ்வொரு முடிச்சுக்களாய் அவிழ, JK இதை எவ்வாறு துப்பறிகிறார், தன் தங்கையை எப்படி மீட்கிறார் என்பதே கதை.
JK வாக சேரன், ஏற்கனவே சோகமாக இருக்கும் இவர் முகம் இந்த பாத்திரத்திற்கு நன்றாக பொருந்துகிறது. ரொம்ப நல்லா நடித்திருக்கிறார், இன்னும் கொஞ்சம் வசன உச்சரிப்பில் மெனக்கெட்டிருக்கலாம். சிபிசிஐடி அதிகாரி என்றவுடன் பயங்கரமா சண்டை போடுவார், காதல் பண்ணுவார், கெத்து காட்டுவார் என்றெல்லாம் கற்பனை பண்ணாதீங்க. அதுமாதிரி எதுவுமே படத்தில் கிடையாது, உண்மைக்கு மிக அருகே சென்று கதை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஜுதாசாக வரும் ஜெயப்பிரகாஷ், பிணவறை மருத்துவராக வந்து வெளுத்துக்கட்டி இருக்கார். இறுதிக்காட்சியில் அவர் பேசும் பஞ்ச் வசனங்களில் பொறி பறக்கிறது. அடுத்து மிகவும் கவரும் பாத்திரம் லட்சமி ராமகிருஷ்ணன். ரொம்ப அழகா உணர்ச்சிப்பூர்வமா நடிச்சி இருக்காங்க. மத்தபடி, YGM, சேரனின் உதவியதிகாரியாக வரும் பெண், ஆண், செல்வா, மாணிக்கவிநாயகம், யுகேந்திரன், எசக்கிமுத்துவாக வரும் போலிஸ் இன்ன பிறர் எல்லாரையும் நல்லா நடிக்க வச்சி இருக்கார் இயக்குனர்.
இது முழுக்க முழுக்க ஒரு மிஷ்கின் படம் என்பதை கண்கூடாக படத்தில் காண முடிகிறது. நிறைய டாப் ஆங்கிள் காட்சிகள், கால்களைக்காட்டுதல், மஞ்சள் சேலை கட்டின பொண்ணு குத்தாட்டம் ஆடறது..இன்னும் நிறைய. ரொம்ப செதுக்கி செதுக்கி படத்தை மிஷ்கின் எடுத்திருப்பார் போல. ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் இயக்குனருக்கு பக்கபலமா பக்காவா கலக்கி இருக்காங்க. இசை சில இடங்களில் யாரிவர் என்று கேட்க வைக்கிறது, பல இடங்களில் கதைக்கு தேவையான மௌனத்தை வேட்டு வைத்து விட்டு துறுத்திக்கொண்டு தெரிகிறது. வசனங்கள் மின்னுகிறது படமெங்கும். இந்தளவிற்கு நிஜ வாழ்க்கையில் நடப்பது மாதிரியே படம் எடுப்பது மிகக்கடினம், மிஷ்கின் மாதிரி இயக்குனர்களுக்கே இது சாத்தியம். என்னதான் இறுதிக்காட்சிகள் கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும், ஒரு நொடி, விழியோரம் ஒருத்துளி கண்ணீர் நம்மையறியாமல் வரத்தான் செய்கிறது.
இது மாதிரி நிறைய கதைகளை ஆங்கிலப்படதிலோ அல்லது வேற்று மொழிப்படத்திலோ பார்த்திருக்கலாம். எப்படி இருப்பினும் மிஷ்கின் படம் எடுத்த விதத்தை கண்டிப்பாக பாராட்டத்தான் வேண்டும். ஆம், நிறைய இடங்களில் லாஜிக் மீறப்பட்டு இருக்கிறது, தேவை இல்லாமல் குத்துப்பாட்டு வருகிறது, இரண்டாம் பாதி துவக்கத்திலிருந்து கதை ஊகிக்க முடிகின்றது...இன்னும் சில சிறிய குறைகள் இருப்பினும், இது ஒரு வித்தியாசமான படம், கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்.
.
2 comments:
nalla vimarchanam... vaalththukkal
மிக்க நன்றி மதுரை சரவணன்.
Post a Comment