நந்தலாலா படம் ஏன் இன்னும் வெளியிடாம இருக்காங்க, என்று வருந்தி ஒரு ஆறு மாதம் முன்பு ஒரு பதிவிட்டிருந்தேன்...(நந்தலாலா???). நான் வருந்தியதில் எள்ளளவும் தவறு இல்லை என இன்று படத்தை பார்த்ததும் உணர்ந்தேன்....மெய் சிலிர்த்தேன். சொல்ல போனால், எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாய் இருக்கிறது படம்.
ஏன் மிஷ்கின் இளையராஜா அவர்களின் பெயரை முதலில் போடுகிறார் என நினைப்பவர்கள் படம் பார்த்த பிறகு உணர்ந்து கொள்வார்கள். SPB அவர்கள் ஒரு முறை சொன்னார், இந்த ஆளு ராட்சசன் மாதிரி கம்போஸ் செய்வார், என ஒரு மேடையில் சொன்னதாக ஞாபகம். அவர் சொன்ன வார்த்தைகள் 1000 % (typo error இல்லை) உண்மை...சத்தியம். படத்திற்கு உயிரை உருக்கிற மாதிரி, மனச பிழியர மாதிரி இசை அமைத்து இருக்கார். நிறைய இடங்களில் என்னையும் அறியாமல் நான் அழுதேன்... இசை இல்லாமல் பார்த்தால் கண்டிப்பாக யாருமே அழ வாய்ப்பில்லை. ஒரு படத்திற்கு எங்கு பின்னணி இசை வர வேண்டும், எங்கு வரக்கூடாது என்ற விஷயத்தை மிக மிக துல்லியமாக செய்துள்ளார் இசைக்கடவுள் .
மகேஷ் முத்துசுவாமி அவர்களின் ஒளிப்பதிவு கண்களை திரையோடு கட்டிப்போட்டு விடுகிறது. ஒவ்வொரு காட்சியும் அப்படியே நம்ம தமிழ்நாட்டின் எழிலை அழகாக கதையோடு கண் முன்னே நிறுத்துகிறார். படத்திற்ற்கு பெயர் போடும் இடத்திலிருந்து முடியும் வரை ஒவ்வொரு காட்சியும் அற்புதம்.
இயக்குனர் மிஷ்கின் அவர்கள் சொன்னது போல அவரின் ஆகச்சிறந்த படைப்பு கண்டிப்பாக நந்தலாலா தான். சினிமா என்பது visual medium என்பதை அழகாக காட்சிகளை கொண்டு விளக்குகிறார். படத்தின் எல்லா வசனத்தையும் ஒரு A4 தாளில் எழுதி விடலாம். படத்தில் மிக அதிகமான சின்ன சின்ன கதாபாத்திரங்கள் இருந்தாலும், அனைவரும் மனதில் நிற்கின்றனர். யாரும் ரொம்ப வசனம் பேசலை, ஓவரா நடிக்க வில்லை. ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு கதை சொல்கின்றது, மிக அழகாக உள்ளது. எல்லாவற்றுக்கும் அடிநாதம் அன்பே என்பதை மிக தெளிவாக சொல்லி இருக்கார் மிஷ்கின். முக்கியமாக, யாரையும் கெட்டவராக காட்ட வில்லை இயக்குனர்.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அகிலேஷாக அஸ்வத் ராம் மற்றும் பாஸ்கர் மணியாக மிஷ்கின். படத்தின் பயணம் முழுக்க இவர்கள் இருவர் தான். நடிக்கிறாங்க என்பது எங்கேயும் தெரியாத அளவிற்கு மிகச்சிறப்பா செஞ்சி இருக்காங்க. அப்புறம் அந்த பள்ளி மாணவி, தேனிலவு தம்பதிகள், மாற்று திறனாளி , காவலர்கள், கலாட்டா காளைகள், இளநீர்கார பெரியவர், பைக்ல வருபவர்கள், லாரி ஓட்டுனர், தடி வச்சி இருக்கிற தாத்தா, விபச்சாரியாக வரும் ஸ்னிக்தா, லாரியில் தூங்கிக்கொண்டு வரும் நாசர், வேலைக்காரி, பாட்டி, பாஸ்கர் மணி அண்ணன், அம்மாவாக வரும் ரோகினி, அகிலேஷின் அம்மாவாக வருபவர், திருடுபவர், ஆட்டோ ஓட்டுனர் என எல்லாரும் அமர்களப்படுத்தி இருக்காங்க.
கதையை பற்றி நான் ஒன்னும் இங்கு சொல்லப்போவது இல்லை. அது ஒரு அனுபவம்...பயண அனுபவம். கண்டிப்பாக திரை அரங்கில் பாருங்கள்...முக்கியமாக நல்ல திரை அரங்கில் பாருங்கள். இது ஒரு ஜப்பானிய படம், ரொம்ப மெதுவா போகுது, ஆர்ட் பிலிம் அப்படின்னு நிறைய பேர் சொல்லுவாங்க...எதையும் நம்பாதிங்க...காது குடுத்து கேட்காதிங்க...கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
.
2 comments:
ஒரு காவியம்தான்.. பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன் சொன்ன மாதிரி முழுசா சந்தோஷப்படவிடாம அந்த காப்பியடிச்ச மேட்டர் தடுக்குது.
காப்பியடிச்ச மேட்டர் தப்பு தான்...ஆனாலும் தமிழுக்கு இந்த களமும் முயற்சியும் புதியது,,மற்றும் பாராட்டுக்குரியது....
Post a Comment