Friday, November 18, 2011

புரட்சி 2020 (Revolution 2020)


சேத்தன் பகத்தின் ஐந்தாவது புத்தகமான Revolution 2020 , போன மாதம் மிகப்பெரிய அளவிலான விளம்பரத்துக்கு மத்தியில் வெளியானது.  ஒரு புத்தகத்திற்கு இந்த அளவிற்கு விளம்பரம், ஹைப் இருப்பது சேத்தனின் பழைய புத்தகங்களின் வெற்றியையே காட்டுகிறது. கதைக்களம் முழுக்க வாரணாசி(காசி) நகரம் மற்றும் கோட்டா நகரத்தில் கொஞ்சம்.

கதையின் நாயகன் கோபால் மிஸ்ரா, கதையை சேத்தனுக்கு சொல்வது போல் ஆரம்பமாகிறது. கோபால், ராகவ், ஆர்த்தி ஆகிய மூவரின் காதல், கனவு, வாழ்க்கை லட்சியம் தான் கதை. கோபாலும் ஆர்த்தியும் சிறு வயதிலிருந்தே நெருக்கமான நண்பர்கள். என்னதான் கோபால் ஆர்த்தியிடம் நெருக்கமான நண்பனாக இருந்தாலும் அவனை காதலனாக அவளால் ஏற்க முடியவில்லை, நெருங்கிய நண்பனாகத்தான் பார்க்கிறாள். கோபாலோ, ஆர்த்தியை மிக ஆழமாக நேசிக்கிறான். கோபால் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் மிகவும் கடினமான சூழ்நிலையில் கொஞ்சம் சுமாராக படிப்பவன். ராகவ் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து மிக நன்றாக படிப்பவன், நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரியில் சேருகிறான். கோபாலோ, குறைவான மதிப்பெண் பெற்று, அவன் தந்தையின் வற்புறத்தலால் மறுபடியும் தேர்வுக்கு தயார் செய்ய காசியிலிருந்து கோட்டா செல்கிறான். ஆர்த்தி சிறு வயதிலிருந்தே விமான பணிப்பெண்ணாக வர ஆசைப்படுகிறாள்.

கோபால் கோட்டாவில் இருக்கும் காலத்தில், ஆர்த்திக்கும் ராகவிற்க்கும் காதல் மலர்கிறது. இதைக்கண்ட கோபால் மிகவும் மனமுடைந்து வெறுத்துப்போய், ஆர்த்தியிடம் சண்டையிட்டு, படிப்பிலும் கோட்டை விடுகிறான். இதனிடையே கோபாலின் தந்தை இறக்கிறார், ராகவ் பொறியியல் படித்தாலும் தன் ஆதர்ச கனவான பத்திரிக்கை உலகில் பெரிய ஆளாக வர நினைக்கிறான். கோபாலுக்கோ வாழ்வில் எப்படியாவது பெரிய ஆளாக வர ஆசை, ஆதலால் தன் தந்தை விட்டுச்சென்ற நிலத்தை வைத்து உள்ளூர் MLA விடம் கூட்டு சேர்ந்து பொறியியல் கல்லூரி ஆரம்ப்பிக்கிறான். ராகவ் எப்போதும் பத்திரிக்கை வேலை என அலைய ஆர்த்தியோ அரவணைப்புக்கு ஏங்க, கோபாலிடம் மெல்ல சேர ஆரம்பிக்கிறாள். இறுதியில் ஆர்த்தி யாருடன் இணைகிறாள், கோபால், ராகவின் லட்சியம் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

கதை பார்ப்பதற்கு ரொம்ப சிம்பிளாகத்தான் இருக்கும், ஆனால் அதை எழுதிய விதத்தில் தான் சேத்தன் ஜெயிக்கிறார். காசி, கோட்டா குறித்த விவரங்கள், அரசியல், கல்லூரி ஆரம்பிக்க தேவையான விவரங்கள், நுழைவு தேர்வுகள், காதல், காதல் தோல்வி என அனைத்தும் கலந்திருக்கிறது. நிறைய இடத்தில வசனங்கள் அருமை. சேத்தனின் டச் புத்தகம் முழுக்க எங்கும் பரவி விரவி இருக்கின்றது. தொடர்ந்து சேத்தனை படிப்பவர்கள் ஒரே மாதிரியே தொடர்ந்து அவர் எழுதும் பாணி சலிப்படைய வைக்கலாம். ஆனாலும் படிக்க ஆரம்பித்தால் வைக்க மனமில்லை...அதுதான் சேத்தனின் வெற்றி. இந்த புத்தகம் கண்டிப்பாக படிக்கலாம்.

Title: Revolution 2020 : Love, Corruption, Ambition
Author: Chetan Bhagat
Publisher: Rupa and Co., New Delhi
Language: English
Release Date: October 2011
Pages: 296
Price: Rs .140 
.