Monday, December 19, 2011

நீயும்...நானும்...வெறுமையும்...!!!



நீ விட்டு சென்ற நினைவுத்தடத்தில்
நடக்கின்றேன் நான்......

முதலில் காதலை நான்தான் சொல்ல வேண்டும் என்றாய்
நான் சொல்ல விழையும் முன் நீயே சொன்னாய்
அதை ரசித்தேன்

ஐந்தரை மணிக்கு வருவேன் என்பாய்
ஆறரைக்கு வருவாய்
அதை ரசித்தேன்

மென்சோகம் கொண்ட முகத்தில்
மெலிதாய் ஒரு புன்னகை சரிய விடுவாய்
அதை ரசித்தேன்

நான் இல்லாத நேரத்தில் எங்கே என
ஓரக்கண்ணில் நோட்டம் விடுவாய்
அதை ரசித்தேன்

ரயில் பயணங்களில் நான் பேசப்பேச
என் தோள்களில் தூங்கி விடுவாய்
அதை ரசித்தேன்

மணமேடையில் உன் கையை மெலிதாய் சீண்டினேன்
வெட்கத்தில் நீ சிவந்தாய்
அதை ரசித்தேன்

உன்னைப்போல அழகான தேவதையை ஈன்றேடுத்தாய்
என் அளவில்லா அன்பின் பரிசென்றாய்
அதை ரசித்தேன்

எனைப்பிரிந்து எப்படி ஒரு வாரம் இருப்பாய் என்றாய்
அசை போட உன் லட்சோப லட்ச நினைவுகள்
எப்போதும் என்னோடு உண்டென்றேன்

அதை நீ ரசித்தாய்.....

நீ இல்லாத போதும் வெறுமை
என்னை தொடுவதில்லை
ஏனென்றால்

நீ விட்டுச்சென்ற நினைவுத்தடத்தில்
நடக்கின்றேன் நான்......
.
  

Friday, November 18, 2011

புரட்சி 2020 (Revolution 2020)


சேத்தன் பகத்தின் ஐந்தாவது புத்தகமான Revolution 2020 , போன மாதம் மிகப்பெரிய அளவிலான விளம்பரத்துக்கு மத்தியில் வெளியானது.  ஒரு புத்தகத்திற்கு இந்த அளவிற்கு விளம்பரம், ஹைப் இருப்பது சேத்தனின் பழைய புத்தகங்களின் வெற்றியையே காட்டுகிறது. கதைக்களம் முழுக்க வாரணாசி(காசி) நகரம் மற்றும் கோட்டா நகரத்தில் கொஞ்சம்.

கதையின் நாயகன் கோபால் மிஸ்ரா, கதையை சேத்தனுக்கு சொல்வது போல் ஆரம்பமாகிறது. கோபால், ராகவ், ஆர்த்தி ஆகிய மூவரின் காதல், கனவு, வாழ்க்கை லட்சியம் தான் கதை. கோபாலும் ஆர்த்தியும் சிறு வயதிலிருந்தே நெருக்கமான நண்பர்கள். என்னதான் கோபால் ஆர்த்தியிடம் நெருக்கமான நண்பனாக இருந்தாலும் அவனை காதலனாக அவளால் ஏற்க முடியவில்லை, நெருங்கிய நண்பனாகத்தான் பார்க்கிறாள். கோபாலோ, ஆர்த்தியை மிக ஆழமாக நேசிக்கிறான். கோபால் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் மிகவும் கடினமான சூழ்நிலையில் கொஞ்சம் சுமாராக படிப்பவன். ராகவ் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து மிக நன்றாக படிப்பவன், நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரியில் சேருகிறான். கோபாலோ, குறைவான மதிப்பெண் பெற்று, அவன் தந்தையின் வற்புறத்தலால் மறுபடியும் தேர்வுக்கு தயார் செய்ய காசியிலிருந்து கோட்டா செல்கிறான். ஆர்த்தி சிறு வயதிலிருந்தே விமான பணிப்பெண்ணாக வர ஆசைப்படுகிறாள்.

கோபால் கோட்டாவில் இருக்கும் காலத்தில், ஆர்த்திக்கும் ராகவிற்க்கும் காதல் மலர்கிறது. இதைக்கண்ட கோபால் மிகவும் மனமுடைந்து வெறுத்துப்போய், ஆர்த்தியிடம் சண்டையிட்டு, படிப்பிலும் கோட்டை விடுகிறான். இதனிடையே கோபாலின் தந்தை இறக்கிறார், ராகவ் பொறியியல் படித்தாலும் தன் ஆதர்ச கனவான பத்திரிக்கை உலகில் பெரிய ஆளாக வர நினைக்கிறான். கோபாலுக்கோ வாழ்வில் எப்படியாவது பெரிய ஆளாக வர ஆசை, ஆதலால் தன் தந்தை விட்டுச்சென்ற நிலத்தை வைத்து உள்ளூர் MLA விடம் கூட்டு சேர்ந்து பொறியியல் கல்லூரி ஆரம்ப்பிக்கிறான். ராகவ் எப்போதும் பத்திரிக்கை வேலை என அலைய ஆர்த்தியோ அரவணைப்புக்கு ஏங்க, கோபாலிடம் மெல்ல சேர ஆரம்பிக்கிறாள். இறுதியில் ஆர்த்தி யாருடன் இணைகிறாள், கோபால், ராகவின் லட்சியம் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

கதை பார்ப்பதற்கு ரொம்ப சிம்பிளாகத்தான் இருக்கும், ஆனால் அதை எழுதிய விதத்தில் தான் சேத்தன் ஜெயிக்கிறார். காசி, கோட்டா குறித்த விவரங்கள், அரசியல், கல்லூரி ஆரம்பிக்க தேவையான விவரங்கள், நுழைவு தேர்வுகள், காதல், காதல் தோல்வி என அனைத்தும் கலந்திருக்கிறது. நிறைய இடத்தில வசனங்கள் அருமை. சேத்தனின் டச் புத்தகம் முழுக்க எங்கும் பரவி விரவி இருக்கின்றது. தொடர்ந்து சேத்தனை படிப்பவர்கள் ஒரே மாதிரியே தொடர்ந்து அவர் எழுதும் பாணி சலிப்படைய வைக்கலாம். ஆனாலும் படிக்க ஆரம்பித்தால் வைக்க மனமில்லை...அதுதான் சேத்தனின் வெற்றி. இந்த புத்தகம் கண்டிப்பாக படிக்கலாம்.

Title: Revolution 2020 : Love, Corruption, Ambition
Author: Chetan Bhagat
Publisher: Rupa and Co., New Delhi
Language: English
Release Date: October 2011
Pages: 296
Price: Rs .140 
.

Saturday, October 29, 2011

வேலாயுதம் !!!

சூப்பர் ஹீரோ, ராபின்ஹுட் கதை தாங்க நம்ம டாக்டர் விஜய்
நடித்து வெளி வந்திருக்கும் வேலாயுதம் படத்தின் அவுட்லைன்.
முதல் பாதி விஜய் மற்றும் கோஷ்டியின் காமெடி, இரண்டாம் பாதி
விஜயின் ஆக்க்ஷன் எனப்படம் செல்கிறது. பாகிஸ்தான்
எல்லையிலிருந்து படம் ஆரம்பிக்கிறது, பாகிஸ்தான்ல
அரைகுறை தமிழ் பேசும் தீவரவாதிகள், தமிழ்நாட்டின் 
அமைதியை குலைக்க தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 
ஆங்கங்கே வெடிகுண்டுகள் வைக்க திட்டம் தீட்டுகின்றனர்.
இதற்கு தமிழ்நாட்டின் உள்துறை அமைச்சரும் துணை
போகின்றார். இதன் நடுவில் பத்திரிக்கை துறையில் இருக்கும்
பாரதி(ஜெனிலியா) தன் நண்பர்களுடன் சேர்ந்து இந்த
அமைச்சர் ஆட்களின் அந்நியாயத்தை வெளிக்கொணரும்
வேலையில் இறங்கி மாட்டிக்கொள்கின்றனர். மற்ற நண்பர்கள்
இறந்து போக, ஜெனிலியா கத்தி குத்துடன் எஸ்கேப் ஆக, அவர்களை கொல்ல வந்த வில்லன் ஆட்கள் எதேச்சையாக
விபத்தில் வண்டியுடன் எரிந்து போகின்றனர். ஜெனிலியா
அவர்களை கொன்றது 'வேலாயுதம்' என எதேச்சையாக
எழுதி வைக்கிறார், கூடவே இனி அடுத்து அடுத்து  திட்டமிடப்பிட்ட  வெடிகுண்டு சதிகளையும் வேலாயுதம்
முறியடிப்பார் என எழுதி வைக்கிறார்.
அப்படியே கட் பண்ணா, கிராமத்தில் வேலாயுதம்(விஜய்) தன்
தங்கை காவேரி (சரண்யா மோகன்) கூட சேர்ந்து லூட்டி அடித்து
ஊரையே கலக்குகின்றனர். விஜயின் முறைப்பொண்ணு  வைதேகி(ஹன்சிகா) அவரயே சுத்தி சுத்தி வந்தாலும், எல்லா தமிழ் பட போல ஹீரோ தன் காதலை வெளிக்காட்டாமல் மனசுக்குள்ளேயே வைச்சிக்கிறார். விஜய் தன் தங்கை கல்யாணத்திற்க்காக
சென்னையில் சீட்டு போட்டு சேர்த்து வைத்த காசை  எடுக்க தன் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சென்னை வருகின்றார்.
சென்னை வந்தவுடன் விஜய்க்கே தெரியாமல் அவர் செய்யும்
ஒவ்வொரு வேலையும் வெடிகுண்டு வைக்கும் கும்பலின் சதியை
முறிப்பதோடு அவரே  ஜெனிலியா உருவாகிய கற்பனை பாத்திரமான வேலாயுதமாக மாறுகிறார் அவரே அறியாமல். ஒரு கட்டத்தில் இதை ஜெனிலியா அவருக்கு புரிய வைக்க, விஜய் தான் வந்தது தன் தங்கை கல்யாணம் விஷயமாக எனச்சொல்லி சீட்டுக்கம்பெனியில் காசு எடுக்க செல்கின்றார். அங்கே சீட்டுக்கம்பனியும் ஊத்தி மூடி விடுகின்றனர். இதுவும் உள்துறை அமைச்சரின் சதிகும்பல் வேலை என விஜய்க்கு தெரிய வர, வேலாயுதமாக ஆக்ஷன்  அவதாரம் எடுத்து எல்லாரையும் வதம் செய்தாரா, தங்கையின் திருமணம் நடந்ததா, ஹன்சிகாவை கரம் பிடித்தாரா என்பது மீதிக்கதை.
டாக்டர் எப்பவும் போல நகைச்சுவை மற்றும் நடனத்தில் பிச்சி எடுக்கிறார்....இன்னும் கொஞ்சம் நல்ல நடன அமைப்பு
வைச்சிருக்குலாம்,  யானைக்கு சோளப்பொறி தான். நடுவே
நடுவே பன்ச் வசனம்லாம் விடறார் போற போக்கில்.(உதாரணம் : நல்லவேளை, நான் ஆளுங்கட்சி). படத்தின் இறுதிக்காட்சியில
6 பேக் லாம் காட்ட முயற்சி செய்து, ஒரு ரெண்டு மூணு பேக்
காட்றார். படத்தில் வர்ற மிக முக்கிய நகைச்சுவையே அந்த ரயில
டாக்டர் நிறுத்துவது தான். Don 't Miss it. ஜெனிலியாக்கு நல்ல ரோல், நல்லாவே நடிச்சிருக்காங்க, ஆனால் படம் முழுக்க ரொம்ப டல்லா இருக்காங்க, கண்ணுக்கு கீழ கருவளையம்லாம் தெரியுது.
ஹன்சிகாதான் படத்தில் செம ஹாட்டு மச்சி !!!
சந்தானம் எப்பவும் போல கவுண்டமணி பாணில லெப்ட்
அண்ட் ரைட் நகைச்சுவைல வெளுத்து வாங்குகிறார். மத்தபடி
படத்தில இன்னும் பெரிய பட்டாளமே நடிச்சி இருக்கு.
கதைக்கு பெருசா மெனக்கெடவில்லை, திருப்பாச்சி கதையவே
கொஞ்சம் உல்டா பண்ணி, அதன் மேல பாகிஸ்தான் தீவரவாதி
கும்பல்னு மசாலா தூவி, உப்பத்தூக்கலா போடற மாதிரி காமடியே கொஞ்சம் தூக்கி வைச்சி, காரமா கொஞ்சம் ஹன்சிகாவை உரிச்சி
ஆட விட்டு படம் பண்ணியிருக்கிறார்கள். முதல் பாகம்
நகைச்சுவையால் போவதே தெரிவதில்லை...ஆனாலும் அந்த
கிராமத்தில் நடப்பது கொஞ்சம் திராபை நகைச்சுவை தான்.
இரண்டாம் பாகம் முழுக்க சண்டை தான்...டாக்டர்  தூக்கின
கையையும் காலையும் இறக்கவே மாட்டேன்றாறு. பாக்கிற
நம்மால தான் முடியல. ரெண்டு மூணு பாட்டு நல்லா இருக்கு, அதுவும் ஹன்சிகா  வர்ற  சில்லாக்ஸ் பாட்டினால அரங்கமே
சூடாகுது.....முடியல !!!  சுபா வசனங்கள் ஆங்காங்கே நச்சுன்னு
இருக்கு. எடிட்டிங் பண்ணவரு இரண்டாம் பாதி செய்யும் போது
தூங்கிட்டாரு போல. ஒரு கமர்ஷியல் படத்துக்கு தேவையான  
பரபரப்பான ஒளிப்பதிவு கொடுத்து இருக்கார் பிரியன்.
எப்பவும் தெலுகு படங்களை ரீமேக்கும் இயக்குனர் ராஜா ரொம்ப கடுமையா உழைச்சி இந்த படத்தை எடுத்து இருப்பார் போல, 
ரெண்டாம் பாதியில்தான் கோட்டை விட்டுட்டார் மனுஷன்.    

படத்துக்கு ரொம்ப பெரிய பட்ஜெட், செலவு அதிகம்னு பேசிக்கினாங்க, 
எங்க  செலவு செஞ்சி இருக்காங்கன்னு யாராவது விலக்கி 
சொன்னாத்தேவலை.  படம் இரண்டாம் பாதி இழுவையை சரிக்கட்டி இருந்தா இன்னும் கொஞ்சம் பெரிய லெவல்ல ஹிட் ஆகியிருக்கும். ஆனால் சுறாக்கள், வில்லுகளுக்கு இந்தப்படம் பரவா இல்லை !!!

Thursday, September 29, 2011

சீனு டைம்ஸ்-10

கொஞ்ச நாள் முன்னாடி ஊருக்கு ஒரு சிறிய விடுப்புக்கு போய்
இருந்தப்ப, நண்பரின் தந்தை நோய்வாய்ப்பட்டு வேலூரில் உள்ள பிரசித்தம் பெற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என கேள்விப்பட்டு அவரைப்பார்க்க சென்றிருந்தேன். அவர் ஏற்கனவே ஆஸ்த்மா தொல்லையால் அவதிப்பட்டு கொண்டிருந்தார், சமீபத்தில் அவரது உடலில் ஆக்ஸிஜன் குறைந்து, நுரையீரல் முழுக்க கார்பன்
டைஆக்ஸ்சைடு  வியாபித்து, ஒரு கட்டத்தில் மயக்கமுற்று
அவசரப்பிரவில் அனுமதிக்கப்பட்டு பின் கொஞ்சம் கொஞ்சமாக
தேறி விட்டார். நான் அவரைப்பார்க்க போன போது நண்பன் அங்கு
இல்லை, கடைக்கு சென்றிருந்தார் என அறிந்தேன். அவர்
தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரைச்சுற்றி  ஏகப்பட்ட
மருத்துவ எந்திரங்கள் காணப்பட்டன. ஒரு பெண் வந்து ஒரு
எந்திரத்தை இயக்கி, அதன் மூலம் அவருக்கு மருந்து கொடுத்தார்,  முடிந்ததும் எந்திரத்தை அணைத்து விட்டு சென்று விட்டார்.

சிறுது நேரம் கழித்து அதே பெண், அவரிடம் வந்து பின் வருமாறு
பேசி விட்டு சென்றார். " பெரியவரே, நான் நாளை முதல் வேற பிரிவுக்கு வேலைக்கு போறேன், நீங்க இன்னும் ரெண்டு நாள்ள
வீட்டுக்கு போய்டுவீங்க...உடம்ப பத்திரமா பார்த்துக்கோங்க, 
வேளைக்கு மருந்து சாப்பிடுங்க, நான் போயிட்டு வரேன்."
எத்தனை பேருக்கு இந்த மனசு வரும், அந்தப்பெண் அவ்வளவு அக்கறையோடும், கரிசனத்தோடும்
விசாரித்து விட்டுச்சென்றது இன்னும் என் கண் முன்னே காட்சியாக
உள்ளது. மருந்தோடு அன்பும் கலக்கும் போது கண்டிப்பாக நோய் இருக்கும் இடம் தெரியாமல் போகும். எத்தனை பேர் இது மாதிரி இருப்பார்கள் எனத்தெரியாது, அனால் இது மாதிரி சில பேராவது இருப்பதால் தான் நாட்டில் சில நல்லதும் நடக்குது, மழையும் அப்பப்ப பெய்யுது.

அன்பின் பாதை சேர்ந்தவருக்கு 
முடிவே இல்லையடா,
மனதின் நீளம் எதுவோ, 
அதுவே வாழ்வின் நீளமடா !!!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கொஞ்சம் நேரம் செலவு செய்து கீழே சுட்டியிடப்பட்ட காணோளியை 
பாருங்கள்.  மோகன் ராஜ் எனப்படும் முன்னாள் சிபிஐ ஆய்வாளர்
மிக அருமையாய், ராஜீவ் கொலை வழக்கின் போக்கை குறித்து
நிறைய வாதங்களை முன் வைக்கிறார், ஏற்கனவே ரகோத்தமன்
(இவரும் ராஜீவ் கொலை வழக்கில் பங்கேற்ற  சிபிஐ அதிகாரி) எழுதிய புத்தகத்தை படித்திருக்கிறேன். அதில் சொல்லப்படாத நிறைய விஷயங்களை மோகன் ராஜ் அவர்கள் சொல்லுகிறார். ஒன்று மட்டும் நன்றாக புலப்படுகிறது, கண்டிப்பாக நிறைய பெரிய தலைகள் ராஜீவ் கொலை வழக்கில் தப்பித்துள்ளனர். கொலை செய்த விடுதலைப்புலிகளை மாட்டிவிட்டு, கொலை செய்யச்சொன்ன, கொலை செய்யத்தூண்டியவர்கள் எல்லாம் தப்பித்து விட்டனர். ராஜீவ் கொலை வழக்கில், ஏனோ மர்மம் விலகவே இல்லை !!!!

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=7YYfXWxe_1A

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

திண்ணை

நண்பகலில் ஒரு பிச்சைக்காரன் வந்து படுத்தான்.....
பின்பு ஒரு நாய் வந்து படுத்துறங்கியது ...
விவசாயி ஒருவன் வந்தமர்ந்தான்...
வீட்டின் மழலைகள் வந்தமர்ந்து விளையாடின...
வேலைக்காரி வந்து சுத்தம் செய்தாள்....
திருவிழா வசூலுக்கு வந்த ஊர்
பெரியவர்கள் சற்று இளைப்பாறினார்...

திண்ணையான என் மீது தான்
எத்தனை சுமைகள்...
ஒவ்வொரு சுமைகளுக்குள் தான்
எத்தனை கதைகள்....!!!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
வேலூரிலிரிந்து ஆற்காடு செல்ல, வேலூர் பேருந்து நிலையத்தில் 
ஒரு தனியார் பேருந்தில் ஏறினேன். ரெண்டு சீட்தான் காலியாக
இருந்தது, ஒன்னு முன்னாடி, இன்னொன்னு பின்னாடி. சரி
முன்னாடி போய் அமர்வோம்னு மூணு பேரு சீட்ல, ரெண்டு 
ஆளுங்க இருந்தாங்க, தள்ளி உட்காருங்குன்னு சொன்னேன். 
அதெல்லாம் முடியாது...மூணு ஆளுக்கு சேர்த்து டிக்கெட்
வாங்கியாச்சி, கிளம்புன்னு சொன்னார். நான் கோவமா நடத்துனர் பக்கம் திரும்பி நான் 55 டிக்கெட் எடுக்குறேன், ஒருத்தரும் சீட்ல 
ஒக்கார கூடாது, சரியான்னு கேட்டேன். நடத்துனர்  சிரிச்சிக்கிட்டே, 
சார் டீசெண்டா இருக்கீங்க, இங்க வாங்கனு வேற சீட் கொடுத்தார். 
நம்ம என்ன கேக்கிறோம், இவர் ஏன் வழியராருனு எனக்கு 
புரியல. 
அப்புறம் ஆற்காடு கிட்ட வந்ததும் இறங்க எத்தனிக்கையில் 
தான் கவனிச்சேன்,  அந்த மூணு சீட்ல உக்கார்ந்து இருந்த ரெண்டு
பேர் கையும் எக்ஸ் பொசிஷன்ல ஒருத்தர் வேட்டிகுள்ளயும், 
இன்னொருத்தர் பேண்டுக்குள்ளையும் மாறி மாறி  இருந்தது. டேய் நீங்க அவங்களாடன்னு தலையில் அடிச்சிக்கிட்டு,  என்ன
கண்றாவிடா இதுனு இறங்கிட்டேன். எப்பா, உங்கள யாரும் இங்க அவங்களா இருக்காதீங்கன்னு சொல்லலை.....ஆனால் 
பொது இடத்தில இதெல்லாம் நல்லாவா இருக்கு ???   

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நகைச்சுவை - 6 !!!







.

Wednesday, September 7, 2011

"மங்காத்தா" டா !!!


உள்ளே தல....வெளியே தல.....
வெளியே தல.....உள்ளே தல....
உள்ளே தல....வெளியே தல.....
வெளியே தல.....உள்ளே தல....

இது தலையோட மங்கத்தாடா....உள்ளேயும் தலதான்...வெளிய்லையும் தலதான்...வாலி, அமர்க்களம், தீனா காலத்தின் அஜித் ரொம்ப யுகங்களுக்கப்பறம் இப்பத்தான் "தல" காட்றார். பொதுவா ஹீரோன்னா, சரக்கடிக்க கூடாது, தம்மடிக்க கூடாது, நிறைய பொண்ணுகிட்ட போகக்கூடாது, திருடக்கூடாது, ஏமாத்தக்கூடாது,கெட்ட வார்த்தை பேசக்கூடாது,தொப்பைய காட்டக்கூடாது, வயச சொல்லக்கூடாது, மல்டி ஸ்டார் படத்தில நடிக்ககூடாது, டை அடிக்காம இருக்கக்கூடாது, சப்ப பசங்கக்கிட்ட அடி வாங்கக்கூடாது......இது மாதிரி ஏகப்பட்ட கூடாதுகள் உண்டு. அனால், மேல சொன்ன எல்லாத்தையும் அஜித் தில்லா தூக்கி போட்டுட்டு இந்த கதையில், இந்த படத்தில் நடிச்சதுக்கே ஒரு ஸ்பெஷல் வாழ்த்துகள்.
கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டமும் அதன் பிண்ணனியில் புரளும் கோடிக்கணக்கான பணமும் தான் கதைக்களம். விநாயக் மகாதேவன் என்ற போலீஸ் பாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். ஒரு கெட்டவனுக்கு உதவப்போகும் தருணத்தில், ஆறு மாதம் வேலையிலிருந்து அஜித் இடைக்கால பணி நீக்கம் செய்யப்படுகிறார். பின்பு நாலு சப்ப பசங்கள பின் தொடர்ந்து, அவர்கள் போடும் 500 கோடி பணத்திருட்டு திட்டத்தில் சேர்ந்து கொள்கிறார். அர்ஜுன்(பிருதிவிராஜ்) தலைமையில் போலீஸ் அணி கிரிக்கெட் சூதாட்ட கும்பலையும், புரளும் பணத்தையும் எல்லா இடங்களிலும் பறிமுதல் செய்கின்றனர். அஜித் தலைமையில் உள்ள ஐவர் குழு எப்படி இந்த 500 கோடி பணத்தை போலீசுக்கும், சூதாட்ட கும்பலுக்கும் தெரியாமல் லவுட்டுகின்றனர், பின்னர் என்ன ஆகிறது என்பதை கண்டிப்பாக எதாவது ஒரு வெள்ளித்திரையிலோ, துணித்திரையிலோ, தங்கத்திரையிலோ காண்க.
படத்தின் முதல் பாதியின், பாதி வரை விதவிதமா நடிகர்கள் புதுசுபுதுசா வந்துகிட்டே இருக்காங்க......அவ்ளோ பெரிய கும்பல் இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அஜித், அர்ஜுன், த்ரிஷா, அஞ்சலி, லட்சுமி ராய், அண்ட்ரியா, வைபவ், பிரேம்ஜி, சுப்பு பஞ்சு, ஜெயப்பிரகாஷ், அர்விந்த் ஆகாஷ்....எம்மாடி...முடியல....போதும் இத்தோடு நிறுத்திக்கிறேன். இவ்வளவு பேர் கதைக்கு தேவைப்பட்டிருந்தாலும், அஜித்தின் ஆளுமைதான் படம் முழுக்க...சொல்ல போனால் அஜித்தின் மற்ற படங்களை விட இந்த படத்தில் அவருக்கு காட்சிகள் குறைவுதான். இரண்டாம் பாதியில் தூள் பரத்துகிறார்....அதுவும் அந்த தனியாக சதுரங்கம் ஆடும் இடம் செம. இது மாதிரி தொடர்ந்து நல்ல ஸ்கோப் உள்ள படங்களில் அஜித் நடிக்கக்கடவுக நாராயணா !!! அர்ஜுனுக்கு வயது முதிர்ச்சி ரொம்பவே தெரிகிறது. திரிஷா கொஞ்சம் நேரம் காதல் பண்றாங்க...பின் அழறாங்க...அப்புறம் காணமேலே போய்டுறாங்க. லட்சமி ராய் தான் செம டாப்பு. அரேபியன் குதிரைலாம் பிச்சை வாங்கணும். அஞ்சலி, ஆண்ட்ரியாலாம் கூட இருக்காங்க. பிரேம்ஜி காமெடி பண்றேன்னு சொற்ப இடங்கள் தவிர்த்து, நிறைய இடத்தில மொக்கை போடுறார்.சென்சார்க்காரங்க தொல்லை பெரும் தொல்லையா இருக்கு....எதையுமே காட்ட மாட்டேன்றாங்க, கொஞ்சம் சீன் தெரியும் காட்சிகளில் கூட ஏதோ ஜிகுஜிகுன்னு வந்துடுது......இந்த மாதிரி காட்றதுக்கு அந்தக்காட்சிய வெட்டியே தொலைக்கலாம். நம்ம எந்த காலத்தில் இருக்கிறோம்னு சில நேரத்தில் பிடிபடுவதில்லை.
படத்தின் இரண்டு மிகப்பெரிய தவறாக எனக்குத்தெரிவது திரைக்கதையும், பாட்டும்தான்.படத்தில் நிறைய இடங்கள் ஆங்காங்கே தொய்வாக செல்கிறது, இரண்டாம் பாதியிலும் கூட. யுவன் என்ன அவசரத்தில் இருந்தாரோ தெரியல, விளையாடு மங்காத்தா பாட்டு தவிர எதுவுமே சரி இல்லை. பின்னணி இசையும் சுமார்தான், அதுவும் முதலில் வரும் நகைச்சுவை காட்சிகளில், பின்னணி இசை ரொம்ப கேவலமா இருக்கு. இத்தனை சுமாரான ஆறு பாட்டு போட்டதுக்கு, இந்த மாதிரி கதைக்கு மூணு பாட்டு மட்டும் நச்சுன்னு போட்டிருக்கலாம். வெங்கட் பிரபு திரைக்கதைக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் பிரம்மாண்டமான வெற்றி பெற்றிருக்கும். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் தான் படத்தின் பலம். வசனங்கள் ஓகே ரகம். வெங்கட் பிரபு அதி தீவிர அஜித் ரசிகர் போல, படத்தை பாருங்கள் புரியும். நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், அஜித்திற்காக மற்றும் மேக்கிங்க்காக கண்டிப்பாய் ஒரு முறை பார்க்கலாம்.
.

Thursday, August 4, 2011

சீனு டைம்ஸ்-9

ரொம்ப நாளாய் பார்க்க வேண்டிய படங்கள் என எண்ணிக்கொண்டிருந்த
இரு படங்களை சமீபத்தில் பார்த்தேன். இந்த இரு படங்களை இவ்வளவு நாளாய்  எப்படி பார்க்கத்தவறினேன் எனத்தெரியவில்லை. அவற்றின்
விவரம் கீழே :-

ஓம்காரா(ஹிந்தி)
அஜய் தேவ்கன், சயீப்அலி கான், விவேக் ஓபராய், நசீருதின்ஷா, கரீனா கபூர், கொன்கனா சென்  எனப்பெரிய பட்டாளமே நடித்த படம். கதை, திரைக்கதை, இசை மற்றும் இயக்கம் விஷால் பரத்வாஜ்.ஷேக்ஸ்பியரின் ஒதேல்லோவை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. மனித மனங்களுக்குள் 
இருக்கும் காதல், காமம், துரோக எண்ணங்கள், துக்கம், சந்தோசம், குற்ற உணர்ச்சி என உணர்ச்சி குவியலான படம். எல்லாரும் அற்புதமா நடிச்சி இருப்பாங்க..அதுவும் சயீப்அலி கான், கரீனாவின் நடிப்பு டாப் கிளாஸ். இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் கண்டிப்பாக விஷால் பரத்வாஜுக்கு மிக முக்கியமான இடம் உண்டு என்பதை நிருபிக்கும் படம் இது. 
தன்மாத்ரா(மலையாளம்)
மோகன்லால் நடித்து ப்ளசி  இயக்கிய ஒரு அற்புதமான படைப்புத்தான் இந்த தன்மாத்ரா. ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்று அற்புதமாய் இந்த படத்தில் காட்டி இருக்கின்றார் இயக்குனர். மிக மிக நெகிழ்ச்சியான படம், அதுவும் மோகன்லால் நடிப்பு மிக இயற்கையாக அற்புதமாக இருக்கும். ஆல்சைமர் நோய்(அறிவாற்றல் இழப்பு)  தாக்கிய மனிதன் எப்படி இருப்பான் என்பதை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கார் மோகன்லால். மோகன்லால் தவிர நெடுமுடி வேணு, மீரா வாசுதேவன், அர்ஜுன் லால், ஜகதி, சீதா எல்லாரும் நல்லா நடித்திருக்கின்றனர்.

வாய்ப்பு கிடைக்கும்போது இந்தப்படங்களை கண்டிப்பாக பாருங்கள். உலகசினிமாக்களுக்கு இந்திய சினிமா சிறிதளவும் குறைந்தது இல்லை என உரத்து கூறும் காவியங்கள் இவை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொஞ்ச நாள் முன்னாடி நார்வேயில் நடந்த பயங்கர தீவரவாத தாக்குதல் 
மொத்தமாக 77 பேரை காவு வாங்கியது. இதைப்பற்றி சம்பவம் நடந்த 
மறுநாள் அலுவலகத்தில் என் சக தமிழ் நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே எதேச்சையாக வந்த
கத்தாரி இஸ்லாம் நண்பர், என்ன பேசுகிறோம் என்று புரிந்து கொண்டு கேட்ட கேள்வி என்னை நிறைய சிந்திக்க வைத்து. அவர் என்ன
கேட்டார் என்றால், "Don't tell me that this attacks were carried out by any Islamic
terrorists?". நான் அந்தச்சம்பவத்தை கொஞ்சம் விளக்கி சொன்ன பிறகுதான் 
அவர் திருப்தி அடைந்தார். எந்தளவிற்கு அவர் இந்த தொடர்
தீவரவாதத்தின் மேல் வெறுப்பு இருந்தால் இந்தக்கேள்வியை கேட்டிருப்பார்? 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்திய கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றதைத்தொடர்ந்து, ஆளாளுக்கு இந்தியா முதல் இடம் வகிக்க தகுதியில்லை என் பேசத்தொடங்கி விட்டது மிகவும்  
கேலிக்கூத்தாக உள்ளது, குறிப்பாக இங்கிலாந்து பத்திரிக்கைகள். இது வரை இங்கிலாந்து ஒரு முறை கூட உலகக்கோப்பை வென்றது இல்லை, டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதல் இடம் பெற்றதும் இல்லை. இத்தனை வருஷம் கவுண்டி கிரிக்கெட் நடத்தி இருந்தாலும், IPL மாதிரி ஒரு பணம் கொழிக்கும்   தொடரை நடத்தியதில்லை. அதுவும் இல்லாம சமீப காலங்களில் பிசிசிஐ உலகக்ரிக்கெட்டில் முக்கிய அங்கமாக மாறிவிட்ட 
புகைச்சல் வேறு. நம்ம நேரத்துக்கு தொடர்ந்து ரெண்டு தோல்வி வேற 
கிடைச்சாச்சா...  எப்படா வாய்ப்பு கிடைக்கும்னு காத்து கிடந்தது போல பேச 
ஆரம்பிச்சிட்டானுங்க.  பெருமைக்கு ...... தின்ற பசங்க பேசுற பேச்சு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு. ரவி சாஸ்த்ரி இவங்க எல்லாத்தையும் செம கிழி கிழிச்சிருக்கார். கீழே உள்ள காணோளியை பாருங்கள். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வாத்தியார் சுஜாதா அவர்கள் முதன்முதலில் எழுதிய நாவலான
நைலான் கயிறு சமீபத்தில் படித்தேன். துப்பறியும் நாவல் தான்....ஆனால் இதில் கணேஷ் மட்டும்தான் வருகிறார். கணேஷ்
பாத்திரம் கூட கதையின் பாதியோடு விடை பெறுகிறது. கணேஷ் 
பாத்திரமே, கணேஷ் + வசந்த் கலந்தாற்ப்போல தான் 
வடிவமைக்கப்பட்டுள்ளது. நிறைய புதுமைகளோடு இந்தக்கதை 
வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது. அப்போதைய காலகட்டத்திலும் கூட சுஜாதா அவர்கள் எந்தளவிற்கு விவரங்கள் கதையின் ஊடே கொடுத்து இருக்கார் என்பது பிரம்மிக்க வைக்கிறது. சிறிய நாவல் தான்,
துப்பறியும் கதைக்களம்... சுஜாதாவின் துள்ளலான நடை...கண்டிப்பாக படிக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது

Live LIFE like a pair of Walking Legs : 
The Foot that's Forward has no Pride & the Foot Behind has no Shame !
BECAUSE, They both Know their Situation will Change.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. இது வரை ஊக்கம் அளித்து
ஆதரவளித்து வந்த அனைவருக்கும், தொடர்ந்து ஆதரவு
கொடுக்கப்போவோருகும் நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
.

Tuesday, July 26, 2011

நகைச்சுவை - 5 !!!








.

Monday, July 25, 2011

வாழ்க்கை இன்னொரு முறை கிடைப்பதில்லை !!! (Zindagi Na Milegi Dobara)

உங்க வாழ்க்கைல நண்பர்களை ரொம்ப மிஸ் பண்றீங்களா? வெளியூர் சுற்றுலா பயணம் நண்பர்களோடு போய் ரொம்ப நாள் ஆச்சா? வாழ்கையின் அர்த்தங்கள் சரியாக பிடிபடுவதில்லையா? உங்களுக்கு அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ்ல விருப்பம் அதிகமா? அப்ப நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்...ஜிந்தகி நா மிலேகி தோபாரா படத்தை பக்கத்தில் ஓடுற திரை அரங்கில் போய் பார்த்துடுங்க. 
 படத்தின் துவக்கத்தில், கபீர்(அபய் தியோல்) தன் காதலை சொல்லி, கல்யாணம் செய்து கொள்ள நடஷாவிடம்(கல்கி) ப்ரபோஸ் செய்கிறார். பிறகு நடக்கும் அவர்களின் நிச்சயத்தில், தன் இரு நண்பர்களோடு 
ஸ்பெயின்  நாட்டுக்கு சென்று மூன்று வாரம் பேச்சிலர் பார்ட்டிதனை
வித்தியாசமாக ரோடு ட்ரிப்பில் செலவிட செல்வதாக சொல்கிறார். 
ஸ்பெயினில் கபீருடன் மற்ற இரு நண்பர்களான இம்ரான்(பர்ஹான் அக்தர்) 
மற்றும் அர்ஜுனும் (ஹ்ரித்திக் ரோஷன்) சேர்ந்து கொள்கின்றனர். 
ஸ்பெயினில் மூன்று நண்பர்களும் அவரவர் விருப்பத்திற்க்கேற்ப 
ஆளுக்கு ஒரு விளையாட்டை, வெவ்வேறு   இடங்களில் தேர்வு  செய்கின்றனர். ஒவ்வொரு இடமாக  நெடுஞ்சாலை வழியாக
செல்கின்றனர்.  எவ்வாறு அவர்களின் ஸ்பெயின் ட்ரிப் செல்கிறது, 
அந்த சுற்றுலாவின் ஊடே நடக்கும்  நிகழ்வுகள், சந்திக்கும்
மனிதர்கள், பின் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு திசை மாறுகிறது என்பதுதான் கதை.     
 ஹ்ரித்திக் ரொம்ப அழகாய் அடக்கி வாசித்து நடித்திருக்கிறார்.
இது மாதிரி மூன்று பேர் உள்ள கதையை தேர்வு செய்து 
நடித்ததற்க்கே ஒரு ஸ்பெஷல் சபாஷ். லைலாவாக வரும் 
காத்ரினாவிடம் காதலில் விழும் இடங்களும், தன் தொழிலா, காதலா, வாழ்க்கையா என குழம்பும்  இடங்களிலும் நல்லா நடித்திருக்கிறார்.
பர்ஹான் படம் முழுக்க நகைச்சுவை செய்கின்றார்...மனதில், தன் உண்மையான தந்தையை தேடும் சோகத்தை வைத்துக்கொண்டு அழகாய் நடித்து இருக்கிறார்...முக்கியமாய் தன் தந்தையை சந்திக்கும் நேரத்திலும், காத்ரினாவிடம் ஜொள்ளு விடும் போதும். படத்தில் உள்ள முக்கியமான ஒன் லைனர்ஸ் மற்றும் ஜாவேத் அக்தரின் கவிதைகள் 
எல்லாம் அற்புதமாய் பர்ஹானுக்கு படத்தில் அமைந்துள்ளது. அபய் தியோலும் எப்பவும் போல அளவா சிம்பிளா  நடித்திருக்கிறார். 
காத்ரினா செம அழகா இருக்கார்..கொஞ்சம் போல நல்லாவும் நடிச்சிருக்காங்க. கல்கி கொச்செளின், நஸ்ருதீன்ஷா எல்லாம் வந்து போறாங்க.   
 வெகு சில இடங்களில் தில் சாஹ்தா ஹய் படத்தின் தாக்கம் இருந்தாலும், படம் டெக்னிக்கலா மிரட்டி இருக்காங்க. முக்கியமா அந்த ஸ்கை டைவிங் 
காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் பிரமிக்க வைக்கிறது. பாக்கிற நாமளும் 
பறக்கிற மாதிரி ஒரு உணர்வு. பின்னணி இசை உறுத்தாமல் படத்தோடு 
ஒன்றி வருகிறது. யாரோ வெளிநாட்டு ஒளிப்பதிவாளர் கார்லோஸ் 
கட்டாலனாம், ரொம்ப இயற்கையா எடுத்து இருக்கார். ஜோயா அக்தர் அற்புதமா எழுதி இயக்கி இருக்காங்க. முக்கியமாய் வசனங்கள் அற்புதம். இன்னும் படத்தில் சிலாகித்து சொல்ல நிறைய விஷயம் உள்ளது.... சொல்லி கேட்பதை விட பார்த்து அனுபவித்தல் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் N O S T A L G I C  என்ற வார்த்தை சொல்வார்கள் 
இல்லையா, இந்தப்படம் முடிகையில்  கண்டிப்பாய் அதை உணர முடியும்.
 மத்தபடி படம் கொஞ்சம் பொறுமையா போகும், உங்களுக்கு டபாங்,
ஓம் சாந்தி ஓம், சிங் இஸ் கிங்  மாதிரி படங்கள்தான் எப்பவும் பிடிக்கும் என்றால்,  இது கண்டிப்பாய் உங்களுக்கான படம் அல்ல. 
.

Tuesday, July 19, 2011

கால் சென்டரில் ஓர் இரவு (One Night @ the Call Center) !!!

சேத்தன் பகத் எழுதிய இரண்டாவது புத்தகம்தான் "One night @ the call center". சமீபத்தில, ஒரு நாலு நாள் விடுமுறைக்கு இந்தியா செல்கையில், தோகாவில் விமானம் ஏறிய உடன் இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். விமானம் மஸ்கட் சென்று, வேறு விமானம் மாறி சென்னை தொடும் நேரத்தில் புத்தகத்தை வாசித்து முடித்திருந்தேன். ஒரு இரவில் நடக்கும் கதைதனை நானும் ஒரே இரவில் படித்து முடித்தேன் (நாங்களும் ஒரே நைட்ல எதாவது செய்வோம் இல்ல !!!)
சேத்தன் ஒரு இரவில் ரயில் பயணம் செல்கையில், கூட பயணிக்கும் ஒரு சக பெண் பிரயாணி சொல்லும் கதைதனை, இந்த புத்தகமாக எழுதி இருக்கார் என்பதில் இருந்து கதை தொடங்குகிறது. எப்பொழுதும் போல கதை சொல்லும் பாணி, கதையின் அகத்தே உள்ள ஒரு பாத்திரத்தை வைத்து அந்த பாத்திரத்தின் நோக்கில் கதை சொல்லப்பட்டுள்ளது. ஒரு இரவில், ஒரு கால் சென்டரில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. அதாவது ஒரு 12 மணி நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை கோர்த்து எழுதப்பட்டவைதான் இந்த புத்தகம். ஒரு இரவின் நிகழ்வுகளை 250 பக்கம் கொண்ட கதையாக எழுத முடியுமா என யோசிப்பவர்கள்......இந்த புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஷ்யாம், வ்ரூம், இஷா, பிரியங்கா, ராதிகா மற்றும் மிலிட்டரி மனிதர் ஆகிய ஆறு பேரும் ஒரு கால் சென்டரில் ஒரு டீமாக வேலை
செய்பவர்கள். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் எதாவது ஒரு பிரச்சினை, விரக்தி, ஏமாற்றங்கள் என இருக்க, ஒரு இரவில் இதை அத்தனையும் சொல்லி, கடைசியில் ஏக போக த்ரில்லோடு கதை முடிகிறது. கதை முழுக்க முழுக்க இரவு ஷிப்டில் கால் சென்டரில் நடப்பவைதான். கதையின் இறுதியில் கடவுள் போன் செய்வது போல் ஒரு நிகழ்வு வருகிறது...இதையும் சேத்தன் இறுதியில் நியாயப்படுத்தியுள்ளார்.  கதையின் இறுதி அப்படியே  ஒரு ஹிந்தி படம்  பாக்கிற மாதிரி ஒரு
உணர்வு. சேத்தன் பெண்களை பற்றி  எழுதுவது மிகவும் ரசிக்கும்படி
உள்ளது. அவரின் மற்ற கதைகளில் எல்லாம்   ஒரு பெண்தான் பிரதானமாக  இருப்பார். இந்த கதையில் மூணு பெண்கள், ஆகையால் கொஞ்சம் கூடுதலா கவனம் செலுத்தி எழுதி இருப்பார் போல.. கால் சென்டர் பற்றி நிறைய விஷயங்கள் கேட்டு, படித்து, பார்த்து எழுதி இருக்கார்....கிடைக்கிற கேப்ல எல்லாம் கால் சென்டருக்கு போன் செய்யும் அமெரிக்காகாரங்களை கிண்டல் அடிச்சி இருக்கார். கால் சென்டரில் நடக்கும் அரசியல், காதல், குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகள் என கலந்து கட்டி சொல்லி, இறுதியில் ஒரு அழுத்தமான செய்தியோடு முடிகிறது கதை.
Title: One night @ the call center
Author: Chetan Bhagat
Publisher: Rupa and Co., New Delhi
Language: English
Release Date: October 2005
Pages: 257
Price: Rs .95

ஒரு சில சொற்ப இடங்களில் கதை கொஞ்சம் மெல்ல நகர்கின்றது, மற்றபடி கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் தான். ஒரு வழியாக சேத்தன் எழுதிய நான்கு புத்தகமும் படித்து விட்டேன். அடுத்த வெளியீடு தீபாவளிக்கு.....காத்திருக்கிறேன். எனக்கு பிடித்த வரிசையில் சேத்தனின் புத்தகங்களை கீழே வரிசைபடுத்தி உள்ளேன். (எல்லா புத்தக தலைப்பிலும் ஒரு எண் இருக்கிறது)
  • 2 States - The Story of My Marriage
  • Five Point Someone
  • One night @ the call center
  • The 3 Mistakes of my Life
.

Saturday, July 16, 2011

டெல்லி பெல்லி - "A" ஓன் மூவி !!!

சமீபத்தில் இந்தளவிற்கு வயிறு வலிக்க சிரிச்சிக்கிட்டே எந்தப்படத்தையும் பார்த்த மாதிரி ஞாபகம் இல்லை. டெல்லி பெல்லி படம் துவக்கத்திலிரிந்து முடிவு வரை அதகளம் தான். அமீர்கான் தயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம்தான் இந்த டெல்லி பெல்லி.
ஏர் ஹோஸ்டஸ் ஆக வேலை பார்க்கும் சோனியா (சேனாஸ்) தன் தோழிக்கு உதவும் நோக்கில், ஒரு கடத்தல் கும்பலின் பார்சல் ஒன்றை கைம்மாற்ற ஒப்புக்கொள்கிறாள்.(பார்சலில் என்ன உள்ளது எனத்தெரியாமலே!). சோனியா அந்தப்பார்சலை தன் காதலன் தஷியிடம்(இம்ரான் கான்) கொடுத்து சேர்த்து விடும்படி சொல்கிறாள். தஷி தன் நண்பனிடம் அந்த வேலயைக்கொடுக்க, அந்த நண்பன் இன்னொரு நண்பனிடம் கொடுக்க....கடைசியில் பார்சல் இடம் மாறி விட, தொடரும் குழப்பங்கள், கடத்தல் கும்பலின் துரத்தல் எனக்கதை சென்று சுபமாகின்றது. இதை முழுக்க முழுக்க நகைச்சுவையோடு சொல்லியிருக்கின்றனர்.

இந்தப்படத்தில் கதாநாயகன் என்று யாரும் இல்லை. எல்லாருக்கும் சமமான பாத்திரம்தான். ஒவ்வொரு சின்ன சின்ன பாத்திரங்கள் கூட அசத்தி இருக்காங்க. இம்ரான்கான் ரொம்ப அளவா நடிச்சி இருக்கார். அவருடைய நண்பர்களாக வரும் அருப்(விர் தாஸ்) மற்றும் நிதின்(குணால் ராய் கபூர்), மேனகா(பூர்ணா ஜகந்நாதன்), வில்லனாக விஜய் ராஸ் எல்லாரும் கலக்கி இருக்காங்க. படம் முழுக்க கெட்ட வார்த்தைகள் தான்..." F " வார்த்தை படம் முழுக்க வந்து கொண்டே இருக்கிறது...அது மட்டும் இல்ல, இன்னும் ஹிந்தியில இருக்கிற நிறைய கெட்ட வார்த்தை. மெட்ரோவில் இருக்கும் மாடர்ன் யூத் எப்படி பேசுவாங்களோ, அப்படியே வந்து விழுகின்றன வசனங்கள். அதே போல் படம் முழுக்க ஆங்கில வசனங்கள்தான்...ஒரு 10 சதவிகிதம் தான் ஹிந்தியே வருகிறது. டிபிக்கலா, இப்போதைய பாச்சிலர்கள் எப்படி இருக்கிறார்களோ, அதை அப்படியே கண் முன்னாடி நிறுத்தி இருக்கார் இயக்குனர்.

படத்துக்கு இதை விட பொருத்தமா தலைப்பும், கேப்சனும் வைக்க முடியுமா என எனக்கு தெரியல. படம் முழுக்க ஷிட், இர்று என அருவருக்க தக்க விஷயங்கள் வியாபித்து இருந்தாலும், அதையெல்லாம் மீறி சிரிக்க வைத்திருப்பது இயக்குனர் மற்றும் கதாசிரியரின் வெற்றியே. கல்லூரி நாட்களில் தினமும் M டிவில சாயங்காலம் இந்த படத்தின் நாயகி சேனாஸ் நடத்தும் மோஸ்ட் வான்டட் பார்த்ததுண்டு. அதுக்கப்புறம் இந்த படத்தில்தான் பார்த்தேன்...படம் முழுக்க புள்ள திமிரிக்கிட்டே இருக்கு இந்த வயசிலயும். இன்னொரு நாயகியா வரும் பூர்ணா ஜகந்நாதன் ஏதோ வெளியூர் பொண்ணாம்..செம தைரியமா நடிச்சி இருக்கு. அப்புறம் அந்த குண்டு நண்பர்... விழுந்து விழுந்து சிரிக்க வச்சிருக்கார், அதுவும் அந்த இறுதிக்கட்சியில துரத்தல் நேரத்திலயும் ஒரு வீட்டு கழிப்பறைக்கு போயிட்டு வெளியில வந்து தேங்க்ஸ்னு சொல்லுவர் பாருங்க...செம கலக்கல். இது மாதிரி படம் முழுக்க சிரிக்க நிறைய இடங்கள் உண்டு. விஜய் ராஸ் கலக்கல் வில்லனா நடிச்சி இருக்கார்.செம டயலாக் டெலிவெரி.(ஏற்கனவே டெல்லி-6 மற்றும் மும்பை எக்ஸ்பரசிலும் கலக்கலா நடிச்சி இருப்பார்). எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் படத்தில் பிடிக்கலை...இறுதியில் அமீர்கான் வரும் பாட்டு. திருஷ்டிக்கு வச்சிட்டார் போல.(நிறைய பேர் இது நல்லா இருக்குனு சொன்னாங்க).

மத்தபடி படத்தின் எல்லா துறையும் அசத்தல்...கலை இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங். இசை யாரோ ராம் சம்பத்தாம்..பின்னணி இசை சுபெர்ப்....அதுவும் வில்லன் விஜய் ராஸ் வரும்போதெல்லாம் ஒரு இசை வரும் பாருங்க....அற்புதமா போட்டு இருக்கார்.அமீர்கானுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு....மனுஷன் வித விதமா படம் எடுக்குறார்...இந்த மாதிரி ஒரு படம் எடுக்க தில் வேணும். நம்ம ஊர்ல, இது மாதிரி ஒரு படம் எடுத்தா முதல்ல பேர மாத்தனும்...(சென்னை வயிறு....நல்லா இருக்கும்???), அப்புறம் தமிழ் படத்தில தமிழே வரலன்னு கொடி பிடிப்பாங்க....அப்புறம் கெட்ட வார்த்தைகள், வல்கர் காட்சிகள் என எல்லாத்துக்கும் ஆப்படிக்கவே இங்க பெரிய கும்பல் வேலை இல்லாமா கலாச்சார காவலர்கள் என்ற பெயரில் இருக்கு. நல்லா சத்தம் போட்டு சிரிச்சி பார்த்தேன் இந்த படத்தை, ஆனால் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்தான். சின்ன பிள்ளைகளை படம் பார்க்க கூட்டிக்கிட்டு போன அப்புறம் அவங்க கேக்கிற கேள்விக்கு பதில் சொல்லி மாளாது !!!!


Friday, June 3, 2011

எனது வாழ்க்கையின் மூன்று தவறுகள் !!! (The 3 mistakes of my life)

The 3 Mistakes if my life, சேத்தன் பகத் அவர்கள் எழுதிய மூன்றாவது புத்தகம். அவர் எழுதிய புத்தகங்களில், நான் படித்த மூன்றாவது  புத்தகம் இது. கதையில் நண்பர்கள் மூன்று, கதைக்களம் வணிகம், மதம் மற்றும் கிரிக்கெட் போன்ற மூன்றை உள்ளடக்கியவை. கதையின் நாயகன் செய்யம் தவறுகளும் மூன்று.

தமிழில் வாத்தியார் சுஜாதா அவர்கள் உண்மையில் நடந்த வரலாற்று நிகழ்ச்சி கொண்டு "இரத்தம் ஒரே நிறம்" என்ற கதையை அற்புதமாக எழுதியிருப்பார். அதே மாதிரி சேத்தன் பகத் அவர்கள் மிக சமீபத்தில் நடந்த நிகழ்வுகளான குஜராத் பூகம்பம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், VVS லக்ஷ்மன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கொல்கத்தாவில் அடித்த சிறப்பான இரட்டை சதத்தினால் இந்தியா அடையும் வரலாற்று வெற்றி போன்றவற்றை கொண்டு அழகான புத்தகம் எழுதி இருக்கார். கதை முழுவதும் கதாநாயகன், ஆசிரியருக்கு சொல்வது போல் எழுதப்பட்டுள்ளது. ஆகையால் கதையின் தொடக்கத்திலும் முடிவிலும் சேத்தன் பகத் அவர்கள் குடும்பத்துடன் ஆஜராகி விடுகின்றார். இந்த யுக்தி எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது.

 கோவிந்த் தான் கதையின் நாயகன், அவரின் தற்கொலை முயற்சியிலிருந்து கதை தொடங்குகிறது. கோவிந்த், இஷான், ஓமி ஆகிய  மூவரும் இணை பிரியா  நண்பர்கள். இருபதுகளின் மத்தியில் இருக்கும் மூவரும், எவ்வாறு ஒன்றாக சேர்ந்து ஒரு சொந்த தொழில் தொடங்கி முன்னேறுகிறார்கள் என்பது தான் கதை. சிறியதாக ஒரு கிரிக்கெட் சாதனங்கள் விற்கும் கடை தொடங்குகின்றனர், பின் எவ்வாறு
அவர்களது கனவுகள் மதம், அரசியல், பூகம்பம், கிரிக்கெட்டில் இந்தியா  அடையும் வரலாற்று வெற்றி, கோவிந்தின் காதல் ஆகியவற்றால் 
திசை மாறுகிறது  என மிகத்தெளிவாக அழகாய் கதை அமைத்திருக்கிறார் 
சேத்தன் பகத்.

மத அரசியலை மிக நயமாக எழுதி இருக்கார். இந்தியா கிரிக்கெட்டில் அடையும் வெற்றி தோல்வி கூட எப்படி சில வியாபாரங்களை பாதிக்கும் எனப்படிக்கையில் வியப்பு மேலிடுகிறது. எப்பவும் போல காதலை மிக இளமையாக சொல்லி இருக்கிறார். நிறைய இடங்களில் வரும் வசனங்கள் பிரம்மிக்க வைக்கிறது, இன்னும் நிறைய இடங்களில் உதட்டோரம் மெலிதான புன்னகை வரவழைக்கிறது. குஜராத்திகளின் இரத்தத்தோடு கலந்திருக்கும் வியாபாரம், சைவ உணவுகள் பத்தி மிக சுவைப்பட சொல்லிருக்கார். கதையின் நாயகன் கணக்கு வாத்தியார் என்பதால் நிறைய இடங்களில் கணக்கை வைத்து வசனம் எழுதி இருப்பது ஆசிரியரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. மிகச்சில(மிக மிக சொற்ப இடங்களில் கொஞ்சம் போர் அடிக்கின்றது... மற்றபடி கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்

Title: The 3 Mistakes of my Life
Author: Chetan Bhagat
Publisher: Rupa and Co., New Delhi
Language: English
Release Date: January 04, 2008
Pages: 268
Price: Rs .95

சேத்தன் பகத்தின் எளிய எழுத்து நடை, நகைச்சுவையோடு சம கால
 நிகழ்வுகள் என இளைஞ்சர்களை தன் எழுத்தால் வசியபடுத்தி  விடுகிறார்.
அவர் எழுதியதில் இன்னும் ஒன்று மட்டும் படிக்க வில்லை, கூடிய விரைவில் படித்து விட வேண்டும், ஏன்னா தீபாவளியன்னைக்கு
அடுத்த புதிய புத்தகம் வெளியாக உள்ளது.
.

எங்கே செல்கிறோம்???

சமீபத்தில், இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ள  காணொளியை   கண்டதிலிருந்து ஏனோ நிரம்ப நாட்களாக தேடிக்கொண்டிருந்த  கேள்விக்கு விடை கிடைத்த மாதிரி, உள்ளுக்குள் ஒரு உணர்வு. நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்.
இந்த செந்தமிழ் என்னும் மனிதர் எவ்வளவு அழகாக உண்மையை பேசுகிறார், முக்கியமாக உண்மையாய் வாழ்கிறார். அவரைப்பார்த்தால்  எனக்கு பொறாமையாய்  இருக்கிறது. நாமெல்லாம் எங்கே தான் செல்கிறோம் என எனக்கு விளங்கவே இல்லை. நாற்பது வயது வரை பணத்தை தேடி ஓடுகிறோம், நல்ல உடல்நிலையை இழக்கிறோம்.  அதன் பிறகு சம்பாதித்த பணத்தை வைத்து தொலைத்த நல்  உடல்நிலையை, மகிழ்ச்சியை மீட்க முயல்கிறோம். உலகமயமாக்களினால் நிறைய நல்லது பெற்றிருக்கிறோம், இருப்பினும் நாம் இழந்தது தான் நிறைய என எனக்குப்படுகிறது....

எனக்கு இந்த நகர வாழ்க்கை எப்போதும் அந்தளவிற்கு இனித்ததில்லை. இங்கு எல்லா சிற்றின்பங்களும் கிடைக்கிறது தான், ஆனாலும் ஏதோ ஒரு 
வெறுமை எப்பொழுதும் கூடவே இருக்கிறது. இன்றளவில் எங்கள் கிராமத்தை விட்டு நான் மிகவும் ஒதுங்கியே இருக்கிறேன் கடந்த இருபது வருடங்களாய்.!! பிடித்தது எது என தெரிந்தும் அதை செய்ய முடியாமல் இருப்பது தான் மிகக்கொடுமை. இன்றளவில் உள்ள மத்திம வயதினர் நிறைய பேர் சந்திக்கும் மிகப்பெரிய சவால் இதுவும் தான்.

சேத்தன் பகத் சமீபத்தில் மிக அழகாய் பேசினார், அதன் இணைப்பு கீழே.
பெரிதாய் படிக்க, படத்தை கிளிக்கவும்
நாம் செய்வது எதுவாய் இருப்பினும் அதில் ஒரு சமநிலை இருக்க வேண்டும், கடுமையாய் முயற்சிக்காமல் அனுபவித்து முயற்சிக்க வேண்டும். நாமெல்லாம் வாழப்பிறந்த மக்கள், இயந்திரங்கள் அல்ல, வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். காசு சேர்த்து கடைசியில்
அனுபிவிக்காம எதற்கு   செத்து போகணும், கேட்டால் என் மகன், பேரன்  நல்லா இருப்பாங்க, அப்படின்னு நிறைய பேர் சொல்வாங்க.
உண்மை என்னன்னு நிறைய நேரங்களில் பார்த்தால், அந்த மகனும்
பேரனும் கூட இதே வசனத்தை பேசிட்டு செத்து  போய்டுவாங்க. !!!!

குடும்பம், நண்பர்கள், வேலை, கேளிக்கை, உடல்நலம் என அனைத்திற்கும் சமமான நேரம் ஒதுக்கி வாழ்க்கையை மகிழ்வுடன் அனுபவிக்க
வேண்டும். இதெல்லாம் சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கும், செய்து பாக்கறது எவ்வளவு கடினம்னு நீங்க சொல்றது கேக்குது....என்ன செய்ய... இங்க கூட சேம் ப்ளட் தான். ஆனாலும் முயற்சி செய்து பாருங்க....நானும் முயற்சி செய்கிறேன்....!!!
.

Sunday, May 15, 2011

நகைச்சுவை - 4 !!!











.

Wednesday, May 11, 2011

சீனு டைம்ஸ்-8

போஸ்டர்கள், பேனர்கள், சுவர் விளம்பரங்களுக்கு தனிச் சிறப்பு பெற்ற
ஊர் மதுரை. போன தடவை மதுரை போனப்ப நான் கண்கூடா பார்த்து
பிரமிச்சேன். உண்மையைச்சொன்னா, இந்த மாதிரி அடிக்கு ஒரு பேனர் வைக்கறத பார்த்தா ஒரே  காமடியா இருந்தது!!!ஒரு நிகழ்ச்சியக்கூட
விடறது இல்லை மதுரை மக்கள்...பாசக்காரங்க....அதுவும் அஞ்சா நெஞ்சருக்கு வைப்பாங்க பாருங்க விதவிதமா  பட்டப்பெயர்...சிரிச்சி மாளாது.

சமீபத்தில், போன மாதம் ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் பேர் அடிச்சாங்க 
பாருங்க ஒரு போஸ்டர்....என்னால முடியல.... இதாங்க அந்த போஸ்டர்களில் வர்ற வாசகம், "வெள்ளை மாளிகையைக் கூட ஆளத் தகுதியான தலைவா, நீ தலைமை செயலகத்துக்கு வரத் தயங்குவது ஏன்?"
மக்களே, என்ன எழுதறதுன்னு கொஞ்சம் யோசிச்சி எழுதுங்கப்பா..எதால சிரிக்கருதுன்னே தெரியல...உங்க அளவில்லா பாசத்திற்கும்,  நகைச்சுவைக்கும்  என்னதான் எல்லை? அவரு பாட்டுக்கு ராணா  பட  டென்ஷன்ல உடம்புக்கு முடியாம ஆஸ்பத்திரியில படுத்துகிட்டு இருக்கார்...அவரைப்போய் உசுப்பேத்திக்கிட்டு...போய் வீட்ல புள்ளகுட்டிங்க இருந்தா ஒழுங்கா படிக்க வைங்க...பொழப்ப பாருங்க !!!
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

விக்ரம் நடிப்பில் மே மாதம் ரிலீஸாகவிருக்கும் 'தெய்வத் திருமகன்' படத்தின் பெயரை மாத்தனும்ன்னு ஏதோ ஒரு சங்கம் சொல்லி இருக்காங்க. அதாவது தெய்வத் திருமகன் என்று மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே சொல்லுவாங்களாம். இதுக்கு  முன்னாடி திருமகன்னு ஒரு படம் வந்துச்சி...அப்ப  எங்க போய் இருந்தாங்க? இப்படியே போனா என்னதான் பேர் வைப்பாங்க?? பேசாம I M VIKRAM னு பேர் வச்சிக்கிலாம், எப்படியும் I M SAM படத்தைதான் உல்டா பண்றாங்க, 
அப்படியே தலைப்பும் அதே மாதிரியே வைச்சிட வேண்டியது தான்!!!    

எனக்கு ஒரு சந்தேகம், தமிழ்நாட்டில யாருமே முத்துராமலிங்கம், ராஜாஜி, 
காமராஜ், அண்ணாதுரை னு பேர் வைச்சிக்கிறது இல்லையா?? கொஞ்ச 
நாள் முன்னாடி கூட  ராக்கெட் ராஜான்னு ஒரு பாட்டில வருதுன்னு 
இன்னொரு கோஷ்டி அளப்பரை செஞ்சாங்க!  நம்ம நாட்டில ஏன்தான் 
இவ்வளவு உணர்ச்சிவசப்படறாங்கன்னு தெரியல....விருமாண்டி படம் எடுக்கும் போது கமல் அவர்கள் கோபம் பொங்க பேசின காணொளியை 
கீழே கண்டு களியுங்கள். ஒரு மனுஷன் எவ்வளவு வெறுப்பாயிருந்தா இப்படி பேசியிருப்பார்??? (பழசுதான்...அட்ஜீஸ்ட் பண்ணிக்கோங்க ப்ளீஸ்...)

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

நாளை மறுநாள், அடுத்த ஐந்து ஆண்டுகள்  தமிழகத்தை சுரண்டப்போவது
யார் என்று தெரிந்து விடும். இவ்வளவு நாள் கழித்து முடிவுகள் வெளி வருவதால் கொஞ்சம் சூடு குறைந்து தான் போய் உள்ளது என சொல்ல வேண்டும். எல்லாரும் அவங்க அவங்க கணிப்ப சொல்லிட்டாங்க....
நாமளும் எதாவது சொல்லணும் இல்லியா...ஆகையால் என்னோட கணிப்பு(கவனிக்கவும்...கணிப்பு மட்டுமே...அதாவது ஊகம்) கீழே.

1. அ.தி.மு.க கூட்டணி 140  முதல் 150 இடங்கள் பெற்று ஆட்சி அமைக்கும்

2.  அ.தி.மு.க,  தி.மு.க கூட்டணிக்கு   பெரும்பான்மை கிடைக்காமல்,
பா.ம.க அல்லது காங்கிரஸ், யாராவது ஒருவர் அல்லது இருவரும்
அணி மாறி அ.தி.மு.கவிற்கு ஆதரவளித்து ஆட்சி அமையும்.

எப்பூடீ ?? நாங்களும் சொல்வோம் இல்ல !!!!
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
.

Sunday, April 24, 2011

கைபேசியும் கவனமும் !!!

தொலைதொடர்பின் விஞ்ஞான உச்சத்தில், நாம் இருக்கும் இந்த காலக்கட்டத்தில், கைபேசி இல்லாது இருத்தல் என்பது மிகக்கடினமான 
ஒன்றுதான். ஆனால் நாம் வாகனம் ஓட்டும் பொழுது கைபேசி
பேசுவது  சரியா?  என்று யோசித்து பார்க்க வேண்டும். கீழே இருக்கும் காணொளியை பாருங்கள்....
 

என்ன காணொளியை பார்த்தாகி விட்டதா??? கண நேர கவனச்சிதறல் தான், ஆனால் அந்த சிறிது நேரத்தால் விளையும் விளைவுகள் 
அதி பயங்கரமானவை. வாகனத்தை ஓட்டிக்கொண்டே அந்த பெண் யாருக்கோ SMS  செய்கிறாள். அந்த சிறிய நேர இடைவெளியில் ஏற்படும் விபத்தினால் அந்தப்பெண் உடன் வரும் அனைவரும் இறக்கின்றனர், அவளுக்கும் மிக பலத்த காயம். இதாவது பரவாயில்லை, கூட வந்தவர்கள் இந்த பெண்ணின் அஜாக்கிரதையால் விபத்துக்குள்ளாகின்றனர்,
ஆனால் எந்த தவறும் செய்யாது அவர் பாதையில் செல்லும் எதிர் 
வண்டிக்காரர் இதனால்  மரணமடைகிறார், தன் இரு பிஞ்சி குழந்தைகளை அனாதையை விடுத்து. இது எந்த விதத்திலும் நியாயமாகாது. கொடுமையின் உச்சம்.

நாம் செய்யும் தவறு நம்மை, நம் கூட வருபவர்கள் மட்டுமில்லாது, எதிரே வருபவர்கள், மற்றும் அவ்வழியே அவசரமாக பரீட்சைக்கு, வேலைக்கு, என இன்னபிற முக்கிய காரணமாக செல்பவர்கள்  என அனைத்து தரப்பினரையும் கண்டிப்பாக பாதிக்கின்றது. இதுவும் ஒரு வகையில் பட்டர்பிளை எபக்ட் தான். யாரோ எங்கோ வாகனம் ஓட்டிக்கொண்டே கைபேசியில் பேசுவதால்  ஏற்படும் கவனசிதறலினால் 
உண்டாகும் விபத்தானது  உருவாக்கும் தாக்கங்கள் மிக கொடியவையாக இருக்கும் பட்சத்தில், நாம் அவ்வளவு முக்கியமாக கைபேசியில் பேசித்தான் அல்லது SMS  அனுப்பித்தான் ஆகணுமா??  அவ்வளவு முக்கியம் / அவசரம் / அவசியம் என இருக்கும் பட்சத்தில் வண்டியை ஓரங்கட்டிவிட்டு கதையுங்கள் காது கிழியும் வரை, யாரும் தடுக்கப்போவதில்லை.
ஆகையால் நண்பர்களே, தயவு செய்து வாகனம் ஓட்டும் பொழுது கைபேசி பயன்படுத்தாதீர் !!! இதனால் ஏற்படும் விளைவுகளை ஒரு கணம் யோசியுங்கள் அல்லது மேலே கண்ட காணொளியில்  வரும் பிஞ்சு முகத்தை ஒரு கணம் நினைத்து பாருங்கள், நீங்களும் கைபேசியை வாகனம் ஓட்டும்பொழுது பயன்படுத்த மாட்டீர் !!! நாம் எதிர்பார்க்கும் மாற்றம் என்பது நம்மில் முதலில் நிகழ வேண்டும் என் நம்புபவன் நான், ஆகையால் தான் இந்த பழக்கத்தை நான் முதலில் நிறுத்தி விட்டேன். நீங்களும் வாகனம் ஓட்டும் பொழுது கைபேசி பயன்பாட்டை 
நிறுத்துவீர்களா?
.

Friday, April 22, 2011

கோ - நல்லா இருக்குங்"கோ"

எனக்கு எப்பவுமே ஒரு படம் பார்ப்பது என்றால் துவக்கத்திலிருந்து  ஒரே ஒரு சின்ன காட்சிக்கூட தவற விடாம பார்த்தாத்தான் படம் பார்த்த பூரண திருப்தி கிடைக்கும். கோ படம் எந்த தொந்தரவும் இல்லாமல் முழுதாக ரசித்துப்பார்த்தேன். கோ படத்தில் பெயர்கள் போடுவது கூட மிக அழாகாக கையாளப்பட்டுள்ளது, பேர்த்தான போடுறாங்கன்னு தவற  விட்டுடாதிங்க. 
படத்தின் கதைக்களம் தினப்பத்திரிக்கையும் அரசியலும் தான். இந்த படத்தின் கதையை நான் சொல்ல விரும்பவில்லை, கதை தெரிந்தப்பின்  படம்  பார்க்கும் திருப்தி சத்தியமாக கிடைக்காது, முக்கியமாக இந்த படத்தை பொறுத்தவரையில். அஷ்வின்(ஜீவா), வசந்தன்(அஜ்மல்), ரேணுகா(கார்த்திகா), சரோ(பியா) ஆகிய இவங்கள சுத்தித்தான் கதை.  தினப்பத்திரிக்கையில் புகைப்படம் எடுப்பவராக வருகிறார் ஜீவா. பல வீர தீர செயல் செய்து படம் எடுப்பவராக வருகிறார். கொடுக்கப்பட்ட   பத்திரதிர்க்கேற்ப நடிப்பை வழங்கியிருக்கார். இளம் அரசியல்வாதியாக வரும் அஜ்மல் அசத்தலா நடிச்சி இருக்கார். கதாநாயகனுக்கு சமமான பாத்திரம்,
பாடல் காட்சிகள் தவிர்த்து.
ராதா மகள் கார்த்திகாவிற்கு தமிழில் நல்ல அறிமுகம். பொண்ணு  நல்லா
நெடுநெடுவென வளர்த்தியா இருக்கு. இந்த அம்மணியின் தெலுங்கு
அறிமுகமான ஜோஷில்  எனக்கு பிடிக்கவில்லை, ஆனால இந்த படத்தில் மிக அழகா இருக்காங்க,  நன்றாக நடிக்கவும் செஞ்சிருக்காங்க. சரோவாக
வரும் பியா செம துள்ளலான கலக்கல் பாத்திரம். சிறிது நேரங்களே
வந்தாலும் பிரகாஷ்ராஜ் மற்றும் கோட்டா ஸ்ரீநிவாஸ் ராவ் ரெண்டு பேரும்
பின்னி பெடலெடுத்து இருக்காங்க. அனுபவம் என்றால் என்ன என்பதை இவங்க ரெண்டு பேர் நடிப்பை  பார்த்தால் நிச்சயம் புரியும். மற்றபடி, போஸ் வெங்கட், ஜெகன், சோனா, சிறகுகள்(அஜ்மல்லின் அரசியல் இயக்கம்) நண்பர்கள், தின அஞ்சல் பத்திரிக்கை  அலுவலர்கள் எல்லாரயும் மிக  நன்றாக நடிக்க வச்சி இருக்கார் இயக்குனர். நிறைய புதுமுகங்கள் சின்ன சின்ன வேடங்கள்  என்றாலும் மிக திறம்பட கையாண்டுள்ளார் இயக்குனர்.
ஹாரிஸின் இசையில் பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ஹிட்தான்.
குவியமில்லா மற்றும் நெற்றிப்பொட்டில் இன்னும் மனதை விட்டு போக
மறுக்கிறது...எல்லா பாடல்களும் அருமை. படத்தை பாருங்கள், பாடல்கள் எடுத்த விதம் இன்னும் ஒரு படி மேல ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர்
ரிச்சர்ட் எம் நாதன், KV ஆனந்தின் கண்ணாக மிக நேர்த்தியாக உழைத்து
இருக்கார். இவர் ஏற்கனவே அங்காடி தெரு, பாணா காத்தாடி செஞ்சி இருந்தாலும் இந்த படத்தில் இவரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
பீட்டர் ஹெய்னின் சண்டைக்காட்சி உருவாக்கத்தில்  இறுதிக்காட்சியில் வரும் சண்டை மிக துல்லியமாக எடுக்கப்பட்டுள்ளது. கலை இயக்குனர் கிரண் நன்றாக செய்துள்ளார். சின்ன சின்ன காட்சிகளுக்கும் டீடைலிங்  அற்புதம்.  அன்டனி எப்பவும் போல அசத்தல், அக நக பாடல் மற்றும் கல கல பாடல்கள் அழகான எடிட்டிங், எவ்வளவு கட்டிங், எத்தனை பிரேம்ஸ்...
சுபெர்ப்.
கதை, திரைக்கதை KV ஆனந்த் மற்றும் சுபா. வசனங்கள் சுபா, நிறைய 
இடங்களில் பத்திரிக்கை உலகத்தின் நுண்ணரசியலை வசனங்களில் 
வெளிப்படுத்தி உள்ளனர். படத்தில் ஒரு இடத்தில், முதல்வராக வரும் 
பிரகாஷ்ராஜ், பத்திரிக்கை ஆளை பார்த்து பேசும் வசனம் இப்படி போகிறது. "நான் மட்டுமா இலவசம் குடுக்கிறேன், உன் வியாபாரம் ஓட  நீ சோப்பு, 
சீப்பு, ஷாம்பு குடுக்கலியா?". சமகால  அரசியல்,  ஓட்டுக்கு காசு, நடிகர்கள் 
பிரச்சாரம் எல்லாம் உண்டு படத்தில். சோனா ஒரு இடத்தில் பிரச்சார 
மேடையில் ஒட்டு கேட்க்கும் போது ஒரு வசனம் வரும் பாருங்க..  ரொம்ப  ரொம்ப 10  மச். நமிதா பேசும் மச்சான்ஸ் தமிழும்  படத்தில்  பகடி செய்யப்பட்டுள்ளது.  ஒரு பத்திரிக்கை அலுவலகம் எப்படி இயங்குகிறது என்பதை மிக அழாகாக காட்டப்பட்டுள்ளது, ஆனால்
நிகழ்கால பத்திரிக்கை உலகம், அதாவது கணினி, இன்டர்நெட், Facebook  கால யுகம்.
KV Ananth
ஒவ்வொரு காட்சியும் படத்தில் அவ்வளவு அழகு. இயக்குனர்
KV ஆனந்திற்கு சிறப்பு வாழ்த்துக்கள். நிறைய உழைத்து இருப்பார் போல...
ஒரு ஜனரஞ்சக  படத்தில் இத்தனை உழைப்பு அருமை. பாடல் காட்சியில் வரும் இடங்கள் எங்கும் பார்த்திராதது. அனால் இயக்குனரின் முந்தைய படமான அயன் கூட இதை ஒப்பிட கூடாது. அது வேறு களம். இது முற்றிலும் வேறு களம். படத்தில் குறைகளும் சில உண்டு...
வெண்பனியே பாடல் துவங்கும் இடம், இரண்டாம் பாதியில் வரும் தொய்வு, சில இடங்களில் வரும் லாஜிக் மீறல்கள், அனால் இவை அனைத்தும் மிக சொற்பமான குறைகளே.
கோ - A visual treat and definitely one time watch on theater only.
.