Friday, June 3, 2011

எனது வாழ்க்கையின் மூன்று தவறுகள் !!! (The 3 mistakes of my life)

The 3 Mistakes if my life, சேத்தன் பகத் அவர்கள் எழுதிய மூன்றாவது புத்தகம். அவர் எழுதிய புத்தகங்களில், நான் படித்த மூன்றாவது  புத்தகம் இது. கதையில் நண்பர்கள் மூன்று, கதைக்களம் வணிகம், மதம் மற்றும் கிரிக்கெட் போன்ற மூன்றை உள்ளடக்கியவை. கதையின் நாயகன் செய்யம் தவறுகளும் மூன்று.

தமிழில் வாத்தியார் சுஜாதா அவர்கள் உண்மையில் நடந்த வரலாற்று நிகழ்ச்சி கொண்டு "இரத்தம் ஒரே நிறம்" என்ற கதையை அற்புதமாக எழுதியிருப்பார். அதே மாதிரி சேத்தன் பகத் அவர்கள் மிக சமீபத்தில் நடந்த நிகழ்வுகளான குஜராத் பூகம்பம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், VVS லக்ஷ்மன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கொல்கத்தாவில் அடித்த சிறப்பான இரட்டை சதத்தினால் இந்தியா அடையும் வரலாற்று வெற்றி போன்றவற்றை கொண்டு அழகான புத்தகம் எழுதி இருக்கார். கதை முழுவதும் கதாநாயகன், ஆசிரியருக்கு சொல்வது போல் எழுதப்பட்டுள்ளது. ஆகையால் கதையின் தொடக்கத்திலும் முடிவிலும் சேத்தன் பகத் அவர்கள் குடும்பத்துடன் ஆஜராகி விடுகின்றார். இந்த யுக்தி எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது.

 கோவிந்த் தான் கதையின் நாயகன், அவரின் தற்கொலை முயற்சியிலிருந்து கதை தொடங்குகிறது. கோவிந்த், இஷான், ஓமி ஆகிய  மூவரும் இணை பிரியா  நண்பர்கள். இருபதுகளின் மத்தியில் இருக்கும் மூவரும், எவ்வாறு ஒன்றாக சேர்ந்து ஒரு சொந்த தொழில் தொடங்கி முன்னேறுகிறார்கள் என்பது தான் கதை. சிறியதாக ஒரு கிரிக்கெட் சாதனங்கள் விற்கும் கடை தொடங்குகின்றனர், பின் எவ்வாறு
அவர்களது கனவுகள் மதம், அரசியல், பூகம்பம், கிரிக்கெட்டில் இந்தியா  அடையும் வரலாற்று வெற்றி, கோவிந்தின் காதல் ஆகியவற்றால் 
திசை மாறுகிறது  என மிகத்தெளிவாக அழகாய் கதை அமைத்திருக்கிறார் 
சேத்தன் பகத்.

மத அரசியலை மிக நயமாக எழுதி இருக்கார். இந்தியா கிரிக்கெட்டில் அடையும் வெற்றி தோல்வி கூட எப்படி சில வியாபாரங்களை பாதிக்கும் எனப்படிக்கையில் வியப்பு மேலிடுகிறது. எப்பவும் போல காதலை மிக இளமையாக சொல்லி இருக்கிறார். நிறைய இடங்களில் வரும் வசனங்கள் பிரம்மிக்க வைக்கிறது, இன்னும் நிறைய இடங்களில் உதட்டோரம் மெலிதான புன்னகை வரவழைக்கிறது. குஜராத்திகளின் இரத்தத்தோடு கலந்திருக்கும் வியாபாரம், சைவ உணவுகள் பத்தி மிக சுவைப்பட சொல்லிருக்கார். கதையின் நாயகன் கணக்கு வாத்தியார் என்பதால் நிறைய இடங்களில் கணக்கை வைத்து வசனம் எழுதி இருப்பது ஆசிரியரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. மிகச்சில(மிக மிக சொற்ப இடங்களில் கொஞ்சம் போர் அடிக்கின்றது... மற்றபடி கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்

Title: The 3 Mistakes of my Life
Author: Chetan Bhagat
Publisher: Rupa and Co., New Delhi
Language: English
Release Date: January 04, 2008
Pages: 268
Price: Rs .95

சேத்தன் பகத்தின் எளிய எழுத்து நடை, நகைச்சுவையோடு சம கால
 நிகழ்வுகள் என இளைஞ்சர்களை தன் எழுத்தால் வசியபடுத்தி  விடுகிறார்.
அவர் எழுதியதில் இன்னும் ஒன்று மட்டும் படிக்க வில்லை, கூடிய விரைவில் படித்து விட வேண்டும், ஏன்னா தீபாவளியன்னைக்கு
அடுத்த புதிய புத்தகம் வெளியாக உள்ளது.
.

எங்கே செல்கிறோம்???

சமீபத்தில், இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ள  காணொளியை   கண்டதிலிருந்து ஏனோ நிரம்ப நாட்களாக தேடிக்கொண்டிருந்த  கேள்விக்கு விடை கிடைத்த மாதிரி, உள்ளுக்குள் ஒரு உணர்வு. நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்.
இந்த செந்தமிழ் என்னும் மனிதர் எவ்வளவு அழகாக உண்மையை பேசுகிறார், முக்கியமாக உண்மையாய் வாழ்கிறார். அவரைப்பார்த்தால்  எனக்கு பொறாமையாய்  இருக்கிறது. நாமெல்லாம் எங்கே தான் செல்கிறோம் என எனக்கு விளங்கவே இல்லை. நாற்பது வயது வரை பணத்தை தேடி ஓடுகிறோம், நல்ல உடல்நிலையை இழக்கிறோம்.  அதன் பிறகு சம்பாதித்த பணத்தை வைத்து தொலைத்த நல்  உடல்நிலையை, மகிழ்ச்சியை மீட்க முயல்கிறோம். உலகமயமாக்களினால் நிறைய நல்லது பெற்றிருக்கிறோம், இருப்பினும் நாம் இழந்தது தான் நிறைய என எனக்குப்படுகிறது....

எனக்கு இந்த நகர வாழ்க்கை எப்போதும் அந்தளவிற்கு இனித்ததில்லை. இங்கு எல்லா சிற்றின்பங்களும் கிடைக்கிறது தான், ஆனாலும் ஏதோ ஒரு 
வெறுமை எப்பொழுதும் கூடவே இருக்கிறது. இன்றளவில் எங்கள் கிராமத்தை விட்டு நான் மிகவும் ஒதுங்கியே இருக்கிறேன் கடந்த இருபது வருடங்களாய்.!! பிடித்தது எது என தெரிந்தும் அதை செய்ய முடியாமல் இருப்பது தான் மிகக்கொடுமை. இன்றளவில் உள்ள மத்திம வயதினர் நிறைய பேர் சந்திக்கும் மிகப்பெரிய சவால் இதுவும் தான்.

சேத்தன் பகத் சமீபத்தில் மிக அழகாய் பேசினார், அதன் இணைப்பு கீழே.
பெரிதாய் படிக்க, படத்தை கிளிக்கவும்
நாம் செய்வது எதுவாய் இருப்பினும் அதில் ஒரு சமநிலை இருக்க வேண்டும், கடுமையாய் முயற்சிக்காமல் அனுபவித்து முயற்சிக்க வேண்டும். நாமெல்லாம் வாழப்பிறந்த மக்கள், இயந்திரங்கள் அல்ல, வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். காசு சேர்த்து கடைசியில்
அனுபிவிக்காம எதற்கு   செத்து போகணும், கேட்டால் என் மகன், பேரன்  நல்லா இருப்பாங்க, அப்படின்னு நிறைய பேர் சொல்வாங்க.
உண்மை என்னன்னு நிறைய நேரங்களில் பார்த்தால், அந்த மகனும்
பேரனும் கூட இதே வசனத்தை பேசிட்டு செத்து  போய்டுவாங்க. !!!!

குடும்பம், நண்பர்கள், வேலை, கேளிக்கை, உடல்நலம் என அனைத்திற்கும் சமமான நேரம் ஒதுக்கி வாழ்க்கையை மகிழ்வுடன் அனுபவிக்க
வேண்டும். இதெல்லாம் சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கும், செய்து பாக்கறது எவ்வளவு கடினம்னு நீங்க சொல்றது கேக்குது....என்ன செய்ய... இங்க கூட சேம் ப்ளட் தான். ஆனாலும் முயற்சி செய்து பாருங்க....நானும் முயற்சி செய்கிறேன்....!!!
.