Wednesday, March 30, 2011

நகைச்சுவை - 3 !!!








.

Sunday, March 20, 2011

அரசியல் நொறுக்ஸ் !!!

ஒருவழியாக மனம் வெறுத்து அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறுகிறார் வைகோ. இவ்வளவு அவமானங்கள், அவமதிப்புகள் தேவையா?? வைகோ அவர்கள் மீது பொதுவாக மக்கள் வைத்து இருந்த இமேஜ் எனப்படும் நன்மதிப்புக்கு பெரிய வேட்டு வைத்து விட்டார் அம்மையார். வைகோ அவர்கள் ரொம்ம்மம்ம்ம்ப லேட்டு. இந்தியன் படத்தில கவுண்டர், "இங்க சந்த்ருனு ஒரு மானஸ்தன் இருந்தான், அவனை தேடுறன்னு" சொன்னா மாதிரி தமிழக மக்கள் வைகோவை தேட வைத்து விட்டனர் மஞ்சள் துண்டுக்காரரும், அம்மையாரும். இதே நிலைமை நாளை விஜயகாந்துக்கும் கண்டிப்பாக நேரும். இதை சொல்றதுக்கு ஒன்னும் ஜோசியம்லாம் தேவையில்லை, அம்மையாரின் ஆணவம் உலகறிந்த விஷயம்.... இன்னொரு பெருத்த சந்தேகம்...சீமான், வைகோ அவர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த ஒரு காரணத்துக்காகவும் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவுன்னு முடிவு எடுத்து இருப்பார். இப்ப அவர் என்ன செய்வார்??? இடியாப்ப சிக்கல விட பெரும் சிக்கலா இருக்கும் போல.....
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஸ்பெக்ட்ரம் புயலைத்தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்கள்.
  • சொல்லுங்கள் ராசாவே
  • ஒரு ஊரில் ஒரு ராசா
  • 2G மனிதன்
  • ராசாக்கனி
  • கனியிருப்ப ஊழல் கவர்ந்தற்று
  • சிறையில் சின்ன ராசா
  • ஆண்டிமுத்து ஆண்டியான கதை
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஆளுங்கட்சியினர் தேர்தல் அறிக்கை ரொம்ப அமர்க்களமா பயங்கர ஆரவாரத்தோட வெளியிட்டார் தமிழக முதல்வர். ஏற்கனவே இலவசங்கள் கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்கிய பெருமையை தக்க வைத்துக்கொண்டதோடு இல்லமால் இன்னும் மக்களை சோம்பேறி ஆக்குவேன் என்று அற்புதமா ஒரு தேர்தல் அறிக்கை அறிவித்து இருக்கிறார் மாண்புமிகு முதல்வர். மடிக்கணினி, மிக்சி, கிரைண்டர் என இலவசங்கள் ஏராளம். எங்க இருந்து இந்தப்பணம் எல்லாம் வருது? மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே இலவசம் எனக்கொடுக்க எதற்கு அரசு? நலத்திட்டங்கள் எங்கே உள்ளன?? நலத்திட்டங்கள் எழுபது விழுக்காடு எனவும், இலவசத்திட்டங்கள் முப்பது விழுக்காடு என இருந்தால் கொஞ்சமாவது நாடு முன்னேற வாய்ப்புண்டு..அனால் இங்கே நடப்பது உல்டா...பின்ன எப்படி நாடு உருப்படும்?, எப்பவும் போலதான்..."Rich gets Richer....Poor gets Poorer" கதை தொடரும்.

இந்த தேர்தல் அறிக்கைல நிறைய வலியுறுத்துவோம்..பாடுபடுவோம்.. நடவடிக்கை எடுப்போம்..சொல்லி இருக்காங்க. அதாவது இந்த வலியுறுத்துவோம்,பாடுபடுவோம் சங்கதிகள் எல்லாம் கண்துடைப்பு வஸ்துக்கள். நாளைக்கு யாரும் ஒரு கேள்வி கேட்டிட கூடாதில்ல. என்னா ஒரு ராஜதந்திரம்(இந்த வார்த்தைய யாரவது தமிழ் அகராதியிலிருந்து தூக்கிட்டா புண்ணியமா போகும்). எனக்கு வாக்களித்தால் இதெல்லாம் இலவசமா தருவேன் எனசொல்வதும் ஓட்டுக்கு கொடுக்கும் லஞ்சம்தான்... என்ன, தேர்தல் முடிந்த பிறகு தரப்போறாங்க... இது இல்லாமல் தேர்தலுக்கு முன்னாடி வேற ஒவ்வொரு ஓட்டுக்கும் பணம். இந்த ஓட்டுக்கு பணமானது தொகுதியில் நிற்பவரின் நட்சித்திர அந்தஸ்தை பொறுத்து வேறுபடும். சில தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரம் தரப்போறாங்களாம்....

 
கூடிய சீக்கிரம் அடுத்தடுத்த தேர்தல்களில் கீழ்காணும் அறிக்கைகள் வரலாம்.....

  •  தொலைக்காட்சியை தொடர்ந்து DVD பிளேயர் இலவசம்...(இளைஞன், உளியின் ஓசை, பெண் சிங்கம் போன்ற டிவிடிக்கள் கூடதல் இலவசம்)
  • இலவசங்களை போற்றும் வகையில் தமிழ்நாடு எனும் பெயரை இலவசநாடு என மாற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் ஆயிரம் ஊக்கத்தொகை (அ) உதவித்தொகை வழங்கப்படும்(ஒருத்தனும் வேலைக்கு போக மாட்டான்)
  • மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமைகளில் வீட்டுக்கு ஒரு குவார்டர்ரோ அல்லது பீரோ மலிவான விலையில் தரப்படும்...சைடு டிஷ் இலவசம்.
  • டாஸ்மாக்கில் மப்படித்து மல்லாந்தால் ஒரு சொம்பு மோர் இலவசம்

 வாழ்க ஜனநாயகம் !!! வளர்க தமிழகம் !!!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Wednesday, March 9, 2011

ஐந்து புள்ளி யாரோ !!! (5 Point someone)

3 Idiots படம் பார்த்தப்பவே, இவ்வளவு அருமையான படம், கதை வடிவில் எப்படி இருக்கும் எனப் படிக்க ஆவலாக இருந்தேன். அப்புறம் எப்பவும் போல அதை மறந்தாச்சு. அப்புறம், போன விடுமுறையில் ஊருக்கு போனப்ப 2 States - The Story of My Marriage படித்ததிலிருந்து நானும் சேத்தன் பகத் அவர்களின் விசிறியாகி விட்டேன். அவர் எழுதிய மத்த மூன்று புத்தகங்களையும் வாங்கிட்டு வந்துட்டேன். இப்பத்தான் 5 Point someone - What not to do at IIT என்ற சேத்தன் பகத் எழுதிய முதல் புத்தகத்தை
படித்து முடித்தேன். மிக அருமையான அனுபவம். நாமளே ஐ.ஐ.டி. ல  நாலு வருஷம் படிச்சு முடிசாப்பல இருக்கு.  
ஹரி, ரியான், அலோக் என்ற மூவரும் ஐ.ஐ.டி. ல படிக்க சேர்வதில் தொடங்கி, எவ்வாறு நண்பர்கள் ஆனார்கள், எப்படி படித்து முடித்தார்கள், பின் வேலைக்கு சேர்ந்து வாழ்கையில் அடுத்து கட்டத்திற்கு செல்வதோடு கதை முடிகிறது. இதன் ஊடே நம் நாட்டில் உள்ள 
படிப்பு முறை, காதல்,  பெற்றோர்களின் வளர்ப்பு முறை, குடும்ப சூழலால்  விரும்பும் கலையை  செய்ய முடியாது போதல், மாணவர்கள் மனநிலை 
எனக்கதை பல்வேறு தளங்களை தன்னுள் அடக்கியுள்ளது. கதையின் 
மத்தியில் ஆங்காங்கே முக்கியமான பாத்திரங்கள் தாங்கள் 
பேசுவதைப்போல் அத்தியாயங்கள்  வைத்திருப்பது அருமையான விஷயம். சேத்தன் பகத் அவர்களின் எழுத்து நடை அமர்க்களமாக, மிக எளிமையா இருக்கு. இந்த புத்தகம் முழுக்க இளமை கொப்பளிக்கிறது.... கல்லூரி களம் வேற...புகுந்து விளையாடி இருக்கார் சேத்தன். இந்த தலைப்பை விட வேற பொருத்தமான தலைப்பு கிடைக்க வாய்ப்பே இல்லை.
இன்னொரு அம்சமான விஷயம் என்னவென்றால், புத்தகத்தின் அட்டை வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் மிக அழகா இருக்கு. சின்ன சின்ன  டீடைலிங், அந்த சின்ன அட்டையில வியக்க வைக்குது. முன்னுரைல  சேத்தன் எல்லாருக்கும் நன்றி சொல்லி இருக்கார்...அதுல பாருங்க..  மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும், பில் கேட்ஸ்க்கும் அவர்களின்  கண்டுபிடிப்பான MS - Word க்கும் நன்றி சொல்லி இருக்கார். எத்தனை பேர்க்கு இந்த எண்ணம் வரும். இந்த புத்தகம் சேத்தன் எழுதிய முதல் புத்தகமாம்...சொன்னாத்தான் தெரியுது. புத்தகத்தின் அட்டையில் எழுதியிருக்கும் வாசகம் முற்றிலும் உண்மை. "A Perfect  ten - This is 270 pages of pure fun."

Title: Five Point Someone – What not to do at IIT!
Author: Chetan Bhagat
Publisher: Rupa and Co., New Delhi
Language: English
Release Date: January  05, 2004
Price: Rs .95

இந்த புத்தகத்தை பத்தி சொல்கையில் இன்னொரு விஷயமும் சொல்ல விழைகிறேன், த்ரீ இடியட்ஸ் படம் எழுபது சதவிகிதம் இந்தக்கதைதான். ஆனாலும் இதை திரைக்கதை செய்த விதத்தில் தான் எத்தனை
வித்தியாசம். இந்தக்கதையும் எந்த விதத்திலும் குறைந்ததில்லை...
த்ரீ இடியட்ஸ் படமும்  (திரைக்கதை -அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி, 
விது வினோத் சோப்ரா) எந்த விதத்திலும் குறைந்ததில்லை... இரு சாராருமே தங்களின் பணியில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் இன்னொரு சோகமும் மனது நினைக்கின்றது...
வாத்தியார் சுஜாதா அவர்களின் கதையை இதுவரை யாருமே சரியாக திரைக்கதை அமைக்காமல் படத்தை பப்படமாக்கிய சோகம் தான்...
வேற என்ன சொல்ல !!!
.

Tuesday, March 1, 2011

யுத்தம் செய் !!!

யுத்தம் செய் படம், போன வாரம்தான் கத்தாரில் வந்தது, நானும் வலையில் இந்த படத்தை பார்க்கக்கூடாதுன்னு உறுதியோடு இருந்து, ஒருவழியா வெள்ளிகிழமை படம் பார்த்தேன்....மிகவும் ரசித்தேன். ரொம்ப நாள் ஆச்சி இந்த மாதிரி ஒரு த்ரில்லர் கதையை எந்தவித ஹீரோயிசமும்  இல்லாமல் பார்த்து. படம் துவங்கியதிலிருந்து ஒரு வித அமைதியாகவே கொஞ்சம் கொஞ்சமாய் மெதுவாய் கதைக்குள் இழுத்து செல்லப்படுகிறோம்
 JKஎன்ற சிபிசிஐடி  அதிகாரியிடம், நகரெங்கும் மக்கள் புழங்கும் இடங்களில் 
அட்டைபெட்டியில் கிடத்தி வைக்கபட்டிருக்கும் வெட்டப்பட்ட மனித கைகள் பற்றி துப்பு துலக்க கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே காணாமல் போன தன் தங்கையை காணாது சோகத்திலும், தன் துறை மீதிருக்கும் வெறுப்பினாலும் JK இந்த கேசை எடுக்க மறுக்கிறார். பின்பு ஒருவழியாக உயரதிகாரி தன் தங்கையின் கேசை மறுபடியும் எடுக்க வாக்குறுதி  அளித்தபின், JK அவருக்கு கொடுக்கப்பட்ட ரெண்டு துணை அதிகாரிகளுடன் களத்தில்  இறங்குகிறார். பின் மெல்ல மெல்ல ஒவ்வொரு முடிச்சுக்களாய்  அவிழ, JK இதை எவ்வாறு துப்பறிகிறார், தன் தங்கையை  எப்படி மீட்கிறார்  என்பதே கதை. 

JK வாக சேரன், ஏற்கனவே சோகமாக இருக்கும் இவர் முகம் இந்த பாத்திரத்திற்கு நன்றாக பொருந்துகிறது. ரொம்ப நல்லா நடித்திருக்கிறார், இன்னும் கொஞ்சம் வசன உச்சரிப்பில்  மெனக்கெட்டிருக்கலாம். சிபிசிஐடி அதிகாரி என்றவுடன் பயங்கரமா சண்டை போடுவார், காதல் பண்ணுவார், கெத்து காட்டுவார் என்றெல்லாம் கற்பனை பண்ணாதீங்க. அதுமாதிரி எதுவுமே படத்தில் கிடையாது, உண்மைக்கு மிக அருகே சென்று கதை சொல்ல  முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.  ஜுதாசாக வரும் ஜெயப்பிரகாஷ், பிணவறை மருத்துவராக வந்து வெளுத்துக்கட்டி இருக்கார். இறுதிக்காட்சியில் அவர் பேசும் பஞ்ச் வசனங்களில் பொறி பறக்கிறது. அடுத்து மிகவும் கவரும் பாத்திரம் லட்சமி ராமகிருஷ்ணன். ரொம்ப  அழகா உணர்ச்சிப்பூர்வமா நடிச்சி இருக்காங்க. மத்தபடி, YGM, சேரனின்  உதவியதிகாரியாக  வரும் பெண், ஆண், செல்வா, மாணிக்கவிநாயகம்,  யுகேந்திரன், எசக்கிமுத்துவாக வரும்  போலிஸ்  இன்ன பிறர் எல்லாரையும்  நல்லா நடிக்க வச்சி இருக்கார் இயக்குனர். 
இது முழுக்க முழுக்க ஒரு மிஷ்கின் படம் என்பதை கண்கூடாக படத்தில் காண முடிகிறது. நிறைய டாப் ஆங்கிள் காட்சிகள், கால்களைக்காட்டுதல்,  மஞ்சள் சேலை கட்டின பொண்ணு குத்தாட்டம் ஆடறது..இன்னும் நிறைய. ரொம்ப செதுக்கி செதுக்கி படத்தை மிஷ்கின் எடுத்திருப்பார் போல. ஒளிப்பதிவாளரும்,  எடிட்டரும் இயக்குனருக்கு பக்கபலமா பக்காவா கலக்கி  இருக்காங்க. இசை சில இடங்களில் யாரிவர் என்று கேட்க வைக்கிறது, பல இடங்களில் கதைக்கு தேவையான மௌனத்தை வேட்டு வைத்து விட்டு துறுத்திக்கொண்டு தெரிகிறது. வசனங்கள் மின்னுகிறது படமெங்கும். இந்தளவிற்கு நிஜ வாழ்க்கையில் நடப்பது மாதிரியே படம் எடுப்பது மிகக்கடினம், மிஷ்கின் மாதிரி இயக்குனர்களுக்கே இது சாத்தியம்.  என்னதான் இறுதிக்காட்சிகள் கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும், ஒரு  நொடி, விழியோரம் ஒருத்துளி கண்ணீர் நம்மையறியாமல் வரத்தான் செய்கிறது.
இது மாதிரி நிறைய கதைகளை ஆங்கிலப்படதிலோ அல்லது வேற்று மொழிப்படத்திலோ  பார்த்திருக்கலாம். எப்படி இருப்பினும் மிஷ்கின்  படம் எடுத்த விதத்தை கண்டிப்பாக பாராட்டத்தான் வேண்டும். ஆம், நிறைய இடங்களில் லாஜிக் மீறப்பட்டு இருக்கிறது, தேவை இல்லாமல் குத்துப்பாட்டு வருகிறது, இரண்டாம் பாதி துவக்கத்திலிருந்து கதை ஊகிக்க முடிகின்றது...இன்னும் சில சிறிய குறைகள் இருப்பினும், இது ஒரு வித்தியாசமான படம், கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்.
.