Thursday, April 12, 2012

நீ...நான் !!!


தேவதையாய் யாராவது  
பார்த்ததுண்டோ?
தினமும் நான்
உன்னுருவில் பார்க்கின்றேன்....

மின்னலை யாராவது
அருகில் கண்டதுண்டோ?
தினமும் நான்
உன் கண்களில் காண்கின்றேன்...

முழுமதியோடு யாராவது
பேசியதுண்டோ?
தினமும் நான்
உன்னுடன் பேசுகின்றேன்....

மலர்கள்  சிரிப்பதை யாராவது
கண்டதுண்டோ?
தினமும் நான்
உன்னோடு சிரித்து மலர்கின்றேன்...

தென்றல் காற்றோடு யாராவது
வாழ்வதுண்டோ?
தினமும் நான்
உன்னோடு வாழ்ந்து மகிழ்கின்றேன்...

ஓவியங்கள் என்றாவது
காதல் செய்வதுண்டோ?
தினமும் நான்
உன்னோடு காதலில் திளைக்கின்றேன்...

ஆம்..நீ எனக்கு

தேவதை
மின்னல்
முழுமதி
மலர்கள்
தென்றல்
ஓவியம்
இன்னும் பல...

நான் மட்டும்
உனக்கு என்றுமே
நான்தான்.....உன்னனைத்துமே
நான் மட்டும்தான் !!!
.

Sunday, April 8, 2012

உன் எண்ணத்தீண்டாமை !!!

நண்பனே,

குருதியைப்போலத்தான்....
உனது எண்ணங்கள்
என்னுள் பாய்கின்றது....
மூச்சின் கடைசி சுவாசம்
எனைவிட்டு பிரிந்தாலும்
உனது நினைவுகள்
எனைவிட்டு பிரியாது...

உயிரின் கடைசி
நொடி வரை உன்
நினைவுகள் என்றும்
எந்தன் உள்ளத்தின்
உள்ளுக்குள் ஓர்
அழியாச்சுடர் விளக்கே...
அழிக்க உனக்கோ
எனக்கோ யாதும்
துர் நிகழ்வில்லை...

சிறுசிறு இன்பங்கள்
எதிர்பார்க்கும் இப்பூவலகில்
உன் சிரிப்பைத்தவிர
நான் எதையும்
எதிர்பார்த்ததில்லை...
உன் மகிழ்ச்சியில்
பல பொழுதுகளை
தொலைத்தவன் நான்...

இன்று
எனக்கும் அறியாது
என்மேல் உனக்கு ஏன்
இத்தனை வன்மம்...
நான் உனக்கு
நினைத்தது யாவும்
நன்மையன்றே தவிரே
யாதும் தீதில்லை....

உன் கோபங்களை
எனக்கும் விளக்காது...
ஊருக்கும் சொல்லாது...
இன்று எனை மட்டும்
தனியாய் விடுத்து
சென்றது ஏனோ ???

உன்னுள் இருக்கும்
எண்ணங்கள் எனை
தீண்டாமல் செல்வது
நியாயமோ???
தீண்டாமை ஒரு பாவச்செயல்
என உனக்கு தெரியாதா???
உன் எண்ணத்தீண்டாமை
எனைக்கொல்லுதடா....

வேற்றுருவில் வந்தாலும்
வேறு பல சென்மம் எடுத்தாலும்
எனக்கு ஒரு பதில்
கூறி செல்லடா !!!
நான் செய்த பிழை
என்னதான் என எனக்கு
விளக்கிச்செல்லடா !!!
.

Sunday, March 25, 2012

நானும் பறவையே !!!



நான் பறவை....
நாடு கடத்தப்பட்ட பறவை....
கண்ணைக்கட்டி கூட்டுக்குள்
அடைக்கப்பட்ட பறவை...
சுதந்திரமாய் பறக்க
மறந்து போன பறவை...
சிற்றின்ப உலகத்தில்
சிதைந்து போன பறவை...
நல்லார் தீயார்
பேதம் அறியா பறவை...


பறவைக்கும் மனம் உண்டு...
ஆம்...எனக்கும் மனம் உண்டு....
அதில், என்றும் நீ உண்டு...
எனது இறக்கைகள் ஒவ்வொன்றாக
வெட்டப்பட்டாலும்
உனக்காக நான்
மேன்மேலும் பறப்பேன்...
உலகம் சுயநலத்திற்காக
என்மீது சவாரி செய்தாலும்
என் பயணம் உனை  
நோக்கித்தான் என்றும்....
கண்காணா ஜோடிப்பறவையே
உனைநோக்கித்தான்
என் பயணம் என்றும் !!!
எங்கு நீயோ....
அங்கு நீயே
நானாக விழைகிறேன்...
என் மனத்தீயை
உன் அருகாமை எனும்
குளிர்த்தீயில் இழக்க விழைகிறேன்...
எனக்காக காத்திருப்பாய் என
உனை நோக்கி பறக்கும்
பறவை நான்...
ஆம்....நானும் பறவையே !!!
.

Monday, December 19, 2011

நீயும்...நானும்...வெறுமையும்...!!!



நீ விட்டு சென்ற நினைவுத்தடத்தில்
நடக்கின்றேன் நான்......

முதலில் காதலை நான்தான் சொல்ல வேண்டும் என்றாய்
நான் சொல்ல விழையும் முன் நீயே சொன்னாய்
அதை ரசித்தேன்

ஐந்தரை மணிக்கு வருவேன் என்பாய்
ஆறரைக்கு வருவாய்
அதை ரசித்தேன்

மென்சோகம் கொண்ட முகத்தில்
மெலிதாய் ஒரு புன்னகை சரிய விடுவாய்
அதை ரசித்தேன்

நான் இல்லாத நேரத்தில் எங்கே என
ஓரக்கண்ணில் நோட்டம் விடுவாய்
அதை ரசித்தேன்

ரயில் பயணங்களில் நான் பேசப்பேச
என் தோள்களில் தூங்கி விடுவாய்
அதை ரசித்தேன்

மணமேடையில் உன் கையை மெலிதாய் சீண்டினேன்
வெட்கத்தில் நீ சிவந்தாய்
அதை ரசித்தேன்

உன்னைப்போல அழகான தேவதையை ஈன்றேடுத்தாய்
என் அளவில்லா அன்பின் பரிசென்றாய்
அதை ரசித்தேன்

எனைப்பிரிந்து எப்படி ஒரு வாரம் இருப்பாய் என்றாய்
அசை போட உன் லட்சோப லட்ச நினைவுகள்
எப்போதும் என்னோடு உண்டென்றேன்

அதை நீ ரசித்தாய்.....

நீ இல்லாத போதும் வெறுமை
என்னை தொடுவதில்லை
ஏனென்றால்

நீ விட்டுச்சென்ற நினைவுத்தடத்தில்
நடக்கின்றேன் நான்......
.
  

Friday, November 18, 2011

புரட்சி 2020 (Revolution 2020)


சேத்தன் பகத்தின் ஐந்தாவது புத்தகமான Revolution 2020 , போன மாதம் மிகப்பெரிய அளவிலான விளம்பரத்துக்கு மத்தியில் வெளியானது.  ஒரு புத்தகத்திற்கு இந்த அளவிற்கு விளம்பரம், ஹைப் இருப்பது சேத்தனின் பழைய புத்தகங்களின் வெற்றியையே காட்டுகிறது. கதைக்களம் முழுக்க வாரணாசி(காசி) நகரம் மற்றும் கோட்டா நகரத்தில் கொஞ்சம்.

கதையின் நாயகன் கோபால் மிஸ்ரா, கதையை சேத்தனுக்கு சொல்வது போல் ஆரம்பமாகிறது. கோபால், ராகவ், ஆர்த்தி ஆகிய மூவரின் காதல், கனவு, வாழ்க்கை லட்சியம் தான் கதை. கோபாலும் ஆர்த்தியும் சிறு வயதிலிருந்தே நெருக்கமான நண்பர்கள். என்னதான் கோபால் ஆர்த்தியிடம் நெருக்கமான நண்பனாக இருந்தாலும் அவனை காதலனாக அவளால் ஏற்க முடியவில்லை, நெருங்கிய நண்பனாகத்தான் பார்க்கிறாள். கோபாலோ, ஆர்த்தியை மிக ஆழமாக நேசிக்கிறான். கோபால் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் மிகவும் கடினமான சூழ்நிலையில் கொஞ்சம் சுமாராக படிப்பவன். ராகவ் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து மிக நன்றாக படிப்பவன், நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரியில் சேருகிறான். கோபாலோ, குறைவான மதிப்பெண் பெற்று, அவன் தந்தையின் வற்புறத்தலால் மறுபடியும் தேர்வுக்கு தயார் செய்ய காசியிலிருந்து கோட்டா செல்கிறான். ஆர்த்தி சிறு வயதிலிருந்தே விமான பணிப்பெண்ணாக வர ஆசைப்படுகிறாள்.

கோபால் கோட்டாவில் இருக்கும் காலத்தில், ஆர்த்திக்கும் ராகவிற்க்கும் காதல் மலர்கிறது. இதைக்கண்ட கோபால் மிகவும் மனமுடைந்து வெறுத்துப்போய், ஆர்த்தியிடம் சண்டையிட்டு, படிப்பிலும் கோட்டை விடுகிறான். இதனிடையே கோபாலின் தந்தை இறக்கிறார், ராகவ் பொறியியல் படித்தாலும் தன் ஆதர்ச கனவான பத்திரிக்கை உலகில் பெரிய ஆளாக வர நினைக்கிறான். கோபாலுக்கோ வாழ்வில் எப்படியாவது பெரிய ஆளாக வர ஆசை, ஆதலால் தன் தந்தை விட்டுச்சென்ற நிலத்தை வைத்து உள்ளூர் MLA விடம் கூட்டு சேர்ந்து பொறியியல் கல்லூரி ஆரம்ப்பிக்கிறான். ராகவ் எப்போதும் பத்திரிக்கை வேலை என அலைய ஆர்த்தியோ அரவணைப்புக்கு ஏங்க, கோபாலிடம் மெல்ல சேர ஆரம்பிக்கிறாள். இறுதியில் ஆர்த்தி யாருடன் இணைகிறாள், கோபால், ராகவின் லட்சியம் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

கதை பார்ப்பதற்கு ரொம்ப சிம்பிளாகத்தான் இருக்கும், ஆனால் அதை எழுதிய விதத்தில் தான் சேத்தன் ஜெயிக்கிறார். காசி, கோட்டா குறித்த விவரங்கள், அரசியல், கல்லூரி ஆரம்பிக்க தேவையான விவரங்கள், நுழைவு தேர்வுகள், காதல், காதல் தோல்வி என அனைத்தும் கலந்திருக்கிறது. நிறைய இடத்தில வசனங்கள் அருமை. சேத்தனின் டச் புத்தகம் முழுக்க எங்கும் பரவி விரவி இருக்கின்றது. தொடர்ந்து சேத்தனை படிப்பவர்கள் ஒரே மாதிரியே தொடர்ந்து அவர் எழுதும் பாணி சலிப்படைய வைக்கலாம். ஆனாலும் படிக்க ஆரம்பித்தால் வைக்க மனமில்லை...அதுதான் சேத்தனின் வெற்றி. இந்த புத்தகம் கண்டிப்பாக படிக்கலாம்.

Title: Revolution 2020 : Love, Corruption, Ambition
Author: Chetan Bhagat
Publisher: Rupa and Co., New Delhi
Language: English
Release Date: October 2011
Pages: 296
Price: Rs .140 
.

Saturday, October 29, 2011

வேலாயுதம் !!!

சூப்பர் ஹீரோ, ராபின்ஹுட் கதை தாங்க நம்ம டாக்டர் விஜய்
நடித்து வெளி வந்திருக்கும் வேலாயுதம் படத்தின் அவுட்லைன்.
முதல் பாதி விஜய் மற்றும் கோஷ்டியின் காமெடி, இரண்டாம் பாதி
விஜயின் ஆக்க்ஷன் எனப்படம் செல்கிறது. பாகிஸ்தான்
எல்லையிலிருந்து படம் ஆரம்பிக்கிறது, பாகிஸ்தான்ல
அரைகுறை தமிழ் பேசும் தீவரவாதிகள், தமிழ்நாட்டின் 
அமைதியை குலைக்க தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 
ஆங்கங்கே வெடிகுண்டுகள் வைக்க திட்டம் தீட்டுகின்றனர்.
இதற்கு தமிழ்நாட்டின் உள்துறை அமைச்சரும் துணை
போகின்றார். இதன் நடுவில் பத்திரிக்கை துறையில் இருக்கும்
பாரதி(ஜெனிலியா) தன் நண்பர்களுடன் சேர்ந்து இந்த
அமைச்சர் ஆட்களின் அந்நியாயத்தை வெளிக்கொணரும்
வேலையில் இறங்கி மாட்டிக்கொள்கின்றனர். மற்ற நண்பர்கள்
இறந்து போக, ஜெனிலியா கத்தி குத்துடன் எஸ்கேப் ஆக, அவர்களை கொல்ல வந்த வில்லன் ஆட்கள் எதேச்சையாக
விபத்தில் வண்டியுடன் எரிந்து போகின்றனர். ஜெனிலியா
அவர்களை கொன்றது 'வேலாயுதம்' என எதேச்சையாக
எழுதி வைக்கிறார், கூடவே இனி அடுத்து அடுத்து  திட்டமிடப்பிட்ட  வெடிகுண்டு சதிகளையும் வேலாயுதம்
முறியடிப்பார் என எழுதி வைக்கிறார்.
அப்படியே கட் பண்ணா, கிராமத்தில் வேலாயுதம்(விஜய்) தன்
தங்கை காவேரி (சரண்யா மோகன்) கூட சேர்ந்து லூட்டி அடித்து
ஊரையே கலக்குகின்றனர். விஜயின் முறைப்பொண்ணு  வைதேகி(ஹன்சிகா) அவரயே சுத்தி சுத்தி வந்தாலும், எல்லா தமிழ் பட போல ஹீரோ தன் காதலை வெளிக்காட்டாமல் மனசுக்குள்ளேயே வைச்சிக்கிறார். விஜய் தன் தங்கை கல்யாணத்திற்க்காக
சென்னையில் சீட்டு போட்டு சேர்த்து வைத்த காசை  எடுக்க தன் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சென்னை வருகின்றார்.
சென்னை வந்தவுடன் விஜய்க்கே தெரியாமல் அவர் செய்யும்
ஒவ்வொரு வேலையும் வெடிகுண்டு வைக்கும் கும்பலின் சதியை
முறிப்பதோடு அவரே  ஜெனிலியா உருவாகிய கற்பனை பாத்திரமான வேலாயுதமாக மாறுகிறார் அவரே அறியாமல். ஒரு கட்டத்தில் இதை ஜெனிலியா அவருக்கு புரிய வைக்க, விஜய் தான் வந்தது தன் தங்கை கல்யாணம் விஷயமாக எனச்சொல்லி சீட்டுக்கம்பெனியில் காசு எடுக்க செல்கின்றார். அங்கே சீட்டுக்கம்பனியும் ஊத்தி மூடி விடுகின்றனர். இதுவும் உள்துறை அமைச்சரின் சதிகும்பல் வேலை என விஜய்க்கு தெரிய வர, வேலாயுதமாக ஆக்ஷன்  அவதாரம் எடுத்து எல்லாரையும் வதம் செய்தாரா, தங்கையின் திருமணம் நடந்ததா, ஹன்சிகாவை கரம் பிடித்தாரா என்பது மீதிக்கதை.
டாக்டர் எப்பவும் போல நகைச்சுவை மற்றும் நடனத்தில் பிச்சி எடுக்கிறார்....இன்னும் கொஞ்சம் நல்ல நடன அமைப்பு
வைச்சிருக்குலாம்,  யானைக்கு சோளப்பொறி தான். நடுவே
நடுவே பன்ச் வசனம்லாம் விடறார் போற போக்கில்.(உதாரணம் : நல்லவேளை, நான் ஆளுங்கட்சி). படத்தின் இறுதிக்காட்சியில
6 பேக் லாம் காட்ட முயற்சி செய்து, ஒரு ரெண்டு மூணு பேக்
காட்றார். படத்தில் வர்ற மிக முக்கிய நகைச்சுவையே அந்த ரயில
டாக்டர் நிறுத்துவது தான். Don 't Miss it. ஜெனிலியாக்கு நல்ல ரோல், நல்லாவே நடிச்சிருக்காங்க, ஆனால் படம் முழுக்க ரொம்ப டல்லா இருக்காங்க, கண்ணுக்கு கீழ கருவளையம்லாம் தெரியுது.
ஹன்சிகாதான் படத்தில் செம ஹாட்டு மச்சி !!!
சந்தானம் எப்பவும் போல கவுண்டமணி பாணில லெப்ட்
அண்ட் ரைட் நகைச்சுவைல வெளுத்து வாங்குகிறார். மத்தபடி
படத்தில இன்னும் பெரிய பட்டாளமே நடிச்சி இருக்கு.
கதைக்கு பெருசா மெனக்கெடவில்லை, திருப்பாச்சி கதையவே
கொஞ்சம் உல்டா பண்ணி, அதன் மேல பாகிஸ்தான் தீவரவாதி
கும்பல்னு மசாலா தூவி, உப்பத்தூக்கலா போடற மாதிரி காமடியே கொஞ்சம் தூக்கி வைச்சி, காரமா கொஞ்சம் ஹன்சிகாவை உரிச்சி
ஆட விட்டு படம் பண்ணியிருக்கிறார்கள். முதல் பாகம்
நகைச்சுவையால் போவதே தெரிவதில்லை...ஆனாலும் அந்த
கிராமத்தில் நடப்பது கொஞ்சம் திராபை நகைச்சுவை தான்.
இரண்டாம் பாகம் முழுக்க சண்டை தான்...டாக்டர்  தூக்கின
கையையும் காலையும் இறக்கவே மாட்டேன்றாறு. பாக்கிற
நம்மால தான் முடியல. ரெண்டு மூணு பாட்டு நல்லா இருக்கு, அதுவும் ஹன்சிகா  வர்ற  சில்லாக்ஸ் பாட்டினால அரங்கமே
சூடாகுது.....முடியல !!!  சுபா வசனங்கள் ஆங்காங்கே நச்சுன்னு
இருக்கு. எடிட்டிங் பண்ணவரு இரண்டாம் பாதி செய்யும் போது
தூங்கிட்டாரு போல. ஒரு கமர்ஷியல் படத்துக்கு தேவையான  
பரபரப்பான ஒளிப்பதிவு கொடுத்து இருக்கார் பிரியன்.
எப்பவும் தெலுகு படங்களை ரீமேக்கும் இயக்குனர் ராஜா ரொம்ப கடுமையா உழைச்சி இந்த படத்தை எடுத்து இருப்பார் போல, 
ரெண்டாம் பாதியில்தான் கோட்டை விட்டுட்டார் மனுஷன்.    

படத்துக்கு ரொம்ப பெரிய பட்ஜெட், செலவு அதிகம்னு பேசிக்கினாங்க, 
எங்க  செலவு செஞ்சி இருக்காங்கன்னு யாராவது விலக்கி 
சொன்னாத்தேவலை.  படம் இரண்டாம் பாதி இழுவையை சரிக்கட்டி இருந்தா இன்னும் கொஞ்சம் பெரிய லெவல்ல ஹிட் ஆகியிருக்கும். ஆனால் சுறாக்கள், வில்லுகளுக்கு இந்தப்படம் பரவா இல்லை !!!

Thursday, September 29, 2011

சீனு டைம்ஸ்-10

கொஞ்ச நாள் முன்னாடி ஊருக்கு ஒரு சிறிய விடுப்புக்கு போய்
இருந்தப்ப, நண்பரின் தந்தை நோய்வாய்ப்பட்டு வேலூரில் உள்ள பிரசித்தம் பெற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என கேள்விப்பட்டு அவரைப்பார்க்க சென்றிருந்தேன். அவர் ஏற்கனவே ஆஸ்த்மா தொல்லையால் அவதிப்பட்டு கொண்டிருந்தார், சமீபத்தில் அவரது உடலில் ஆக்ஸிஜன் குறைந்து, நுரையீரல் முழுக்க கார்பன்
டைஆக்ஸ்சைடு  வியாபித்து, ஒரு கட்டத்தில் மயக்கமுற்று
அவசரப்பிரவில் அனுமதிக்கப்பட்டு பின் கொஞ்சம் கொஞ்சமாக
தேறி விட்டார். நான் அவரைப்பார்க்க போன போது நண்பன் அங்கு
இல்லை, கடைக்கு சென்றிருந்தார் என அறிந்தேன். அவர்
தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரைச்சுற்றி  ஏகப்பட்ட
மருத்துவ எந்திரங்கள் காணப்பட்டன. ஒரு பெண் வந்து ஒரு
எந்திரத்தை இயக்கி, அதன் மூலம் அவருக்கு மருந்து கொடுத்தார்,  முடிந்ததும் எந்திரத்தை அணைத்து விட்டு சென்று விட்டார்.

சிறுது நேரம் கழித்து அதே பெண், அவரிடம் வந்து பின் வருமாறு
பேசி விட்டு சென்றார். " பெரியவரே, நான் நாளை முதல் வேற பிரிவுக்கு வேலைக்கு போறேன், நீங்க இன்னும் ரெண்டு நாள்ள
வீட்டுக்கு போய்டுவீங்க...உடம்ப பத்திரமா பார்த்துக்கோங்க, 
வேளைக்கு மருந்து சாப்பிடுங்க, நான் போயிட்டு வரேன்."
எத்தனை பேருக்கு இந்த மனசு வரும், அந்தப்பெண் அவ்வளவு அக்கறையோடும், கரிசனத்தோடும்
விசாரித்து விட்டுச்சென்றது இன்னும் என் கண் முன்னே காட்சியாக
உள்ளது. மருந்தோடு அன்பும் கலக்கும் போது கண்டிப்பாக நோய் இருக்கும் இடம் தெரியாமல் போகும். எத்தனை பேர் இது மாதிரி இருப்பார்கள் எனத்தெரியாது, அனால் இது மாதிரி சில பேராவது இருப்பதால் தான் நாட்டில் சில நல்லதும் நடக்குது, மழையும் அப்பப்ப பெய்யுது.

அன்பின் பாதை சேர்ந்தவருக்கு 
முடிவே இல்லையடா,
மனதின் நீளம் எதுவோ, 
அதுவே வாழ்வின் நீளமடா !!!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கொஞ்சம் நேரம் செலவு செய்து கீழே சுட்டியிடப்பட்ட காணோளியை 
பாருங்கள்.  மோகன் ராஜ் எனப்படும் முன்னாள் சிபிஐ ஆய்வாளர்
மிக அருமையாய், ராஜீவ் கொலை வழக்கின் போக்கை குறித்து
நிறைய வாதங்களை முன் வைக்கிறார், ஏற்கனவே ரகோத்தமன்
(இவரும் ராஜீவ் கொலை வழக்கில் பங்கேற்ற  சிபிஐ அதிகாரி) எழுதிய புத்தகத்தை படித்திருக்கிறேன். அதில் சொல்லப்படாத நிறைய விஷயங்களை மோகன் ராஜ் அவர்கள் சொல்லுகிறார். ஒன்று மட்டும் நன்றாக புலப்படுகிறது, கண்டிப்பாக நிறைய பெரிய தலைகள் ராஜீவ் கொலை வழக்கில் தப்பித்துள்ளனர். கொலை செய்த விடுதலைப்புலிகளை மாட்டிவிட்டு, கொலை செய்யச்சொன்ன, கொலை செய்யத்தூண்டியவர்கள் எல்லாம் தப்பித்து விட்டனர். ராஜீவ் கொலை வழக்கில், ஏனோ மர்மம் விலகவே இல்லை !!!!

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=7YYfXWxe_1A

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

திண்ணை

நண்பகலில் ஒரு பிச்சைக்காரன் வந்து படுத்தான்.....
பின்பு ஒரு நாய் வந்து படுத்துறங்கியது ...
விவசாயி ஒருவன் வந்தமர்ந்தான்...
வீட்டின் மழலைகள் வந்தமர்ந்து விளையாடின...
வேலைக்காரி வந்து சுத்தம் செய்தாள்....
திருவிழா வசூலுக்கு வந்த ஊர்
பெரியவர்கள் சற்று இளைப்பாறினார்...

திண்ணையான என் மீது தான்
எத்தனை சுமைகள்...
ஒவ்வொரு சுமைகளுக்குள் தான்
எத்தனை கதைகள்....!!!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
வேலூரிலிரிந்து ஆற்காடு செல்ல, வேலூர் பேருந்து நிலையத்தில் 
ஒரு தனியார் பேருந்தில் ஏறினேன். ரெண்டு சீட்தான் காலியாக
இருந்தது, ஒன்னு முன்னாடி, இன்னொன்னு பின்னாடி. சரி
முன்னாடி போய் அமர்வோம்னு மூணு பேரு சீட்ல, ரெண்டு 
ஆளுங்க இருந்தாங்க, தள்ளி உட்காருங்குன்னு சொன்னேன். 
அதெல்லாம் முடியாது...மூணு ஆளுக்கு சேர்த்து டிக்கெட்
வாங்கியாச்சி, கிளம்புன்னு சொன்னார். நான் கோவமா நடத்துனர் பக்கம் திரும்பி நான் 55 டிக்கெட் எடுக்குறேன், ஒருத்தரும் சீட்ல 
ஒக்கார கூடாது, சரியான்னு கேட்டேன். நடத்துனர்  சிரிச்சிக்கிட்டே, 
சார் டீசெண்டா இருக்கீங்க, இங்க வாங்கனு வேற சீட் கொடுத்தார். 
நம்ம என்ன கேக்கிறோம், இவர் ஏன் வழியராருனு எனக்கு 
புரியல. 
அப்புறம் ஆற்காடு கிட்ட வந்ததும் இறங்க எத்தனிக்கையில் 
தான் கவனிச்சேன்,  அந்த மூணு சீட்ல உக்கார்ந்து இருந்த ரெண்டு
பேர் கையும் எக்ஸ் பொசிஷன்ல ஒருத்தர் வேட்டிகுள்ளயும், 
இன்னொருத்தர் பேண்டுக்குள்ளையும் மாறி மாறி  இருந்தது. டேய் நீங்க அவங்களாடன்னு தலையில் அடிச்சிக்கிட்டு,  என்ன
கண்றாவிடா இதுனு இறங்கிட்டேன். எப்பா, உங்கள யாரும் இங்க அவங்களா இருக்காதீங்கன்னு சொல்லலை.....ஆனால் 
பொது இடத்தில இதெல்லாம் நல்லாவா இருக்கு ???   

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!