Wednesday, October 20, 2010

"அண்ணா"ந்து பார் !!!

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய இரு பெருந்தலைவர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் காமராஜர் அவர்கள். நெடுநாளாய் இவர்களை பற்றிய வாழ்க்கை வரலாறு படிக்க ஆவலாய் இருந்தேன். போன விடுமுறையில் தென்காசிக்கு நண்பன் கல்யாணத்திற்கு போன போது, திருநெல்வேலியில் ரயில் ஏறும் முன்பு, செஞ்சுரி புத்தகக்கடையில் என்.சொக்கன் எழுதிய "அண்ணா"ந்து பார்! புத்தகமும் வாங்கினேன்.

சின்ன வயதில் நான் வளர்ந்த காலத்தில் அதிகம் பார்த்த கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் அண்ணா அவர்கள் பேர் சொல்லியேதான் அன்றிலிருந்து இன்றுவரை அரசியல்
செய் - தார்கள், கின்றார்கள், வார்கள். தமிழக அரசியலில் அண்ணா அவர்கள் ஏற்படுத்திய மாற்றம் வியக்கத்தக்கது, 1967ல் அண்ணா அவர்களால் ஆட்சி  இழந்த  தேசிய கட்சியான காங்கிரஸ் இன்று வரை தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை, அண்ணா அவர்கள் போட்ட அஸ்திவாரம் அப்படி. அண்ணாவின் மறைவிற்கு பிறகு, இன்று வரை அவர் தோற்றுவித்த தி.மு.க மற்றும் அவர் பெயரால் தோற்றுவிக்கப்பட்ட  அ.தி.மு.க.  மட்டும்தான் தமிழகத்தில்  ஆட்சி செய்கின்றனர்.

புத்தகம் அண்ணா மற்றும் பெரியார் இருவரிடையே ஏற்பட்ட முதல் சந்திப்பிலிருந்து தொடங்குகிறது, தொடர்ந்து அண்ணா அவர்களின் பிறப்பு, பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, அரசியல், பேச்சு மற்றும் எழுத்து பணி பிறகு அரசியல் களம் என விரிகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த களத்தில் இருந்த அரசியல் கட்சிகள், பெரியாரிடம் அண்ணா கொண்ட ஈடுபாடு, ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டங்கள், பெரியாரிடம் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து தனி கட்சி தொடங்கியது, பத்திரிக்கைகள் மற்றும் நாடகங்கள் நடத்தியது, தனி திராவிட நாடு கோரிக்கை, தி.மு.க தேர்தலை சந்தித்த விதம், காங்கிரசை தோற்கடித்து ஆட்சிக்கு வந்தது என நிறைய பல நிகழ்வுகளின் கோர்வையாக உள்ளது.

பெரியாரிடம் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கடைசி வரை அண்ணா பெரியாரை எந்த சமயத்திலும் விட்டு கொடுத்ததே இல்லை, பெரியார் அண்ணாவை இகழ்ந்து பேசியும் கூட. புத்தகத்தில் அண்ணா அவர்களின் குறைகள் பற்றி எதுவும் பெரிசா இல்லை...சும்மா கண்துடைப்புக்கு கொஞ்சம் இருக்கு.

அண்ணா வாழ்க்கை பற்றிய இந்த புத்தகத்தில், இன்றைய முதல்வர் பெயர் ஒரு சில இடத்தில் வருகிறது...எங்கோ ஒரு ஓரத்தில் இருந்தவர், அண்ணாவின் மறைவுக்கு பிறகு பல பேரை காலி செய்து விட்டு முதல்வர் ஆகி விட்டார், இன்று வரை யாரையும் அவரை மீறி வளர விடாம பார்த்துகிட்டு இருக்கார். எதற்கெடுத்தாலும் அண்ணா பேர் சொல்லும் திராவிட கட்சிகள் அண்ணா செய்த மற்றும் செய்ய நினைத்த நல்லாட்சியில் கொஞ்சம் கூட இது நாள் வரை செய்யவில்லை, அப்புறம் என்ன அண்ணா நாமம் வாழ்க, அண்ணா மூன்றெழுத்து, தி.மு.க மூன்றெழுத்துன்னு கதைய விட்டுகிட்டு...!

புத்தகம்

ஆசிரியர் : என்.சொக்கன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் : 184
விலை : 90
வருடம் : 2007
https://www.nhm.in/shop/978-81-8368-006-6.html

கிழக்கு பதிப்பகத்தின் வலைத்தளத்தில் இந்த புத்தகத்தை பற்றி எழுதி இருப்பதை போல், கடல் போன்ற அண்ணாவின் வாழ்கை வரலாற்றை விழுங்கிய ஒரு குடம் தான் இந்த புத்தகம். இன்னும் நிறைய எழுதிருக்கலாமோ என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.எனக்கு புத்தகம் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை தந்தது. எனக்கு வாழ்கை வரலாறுகள் படிக்க ரொம்ப பிடிக்கும், பொதுவாக எல்லாருக்கும் அப்படித்தானே.(அடுத்தவங்க கதையென்றால் நம்மதான் வாய பொளந்து கேட்டுகிட்டு இருப்போமே !!!)
.

15 comments:

M.Mani said...

ஐயா!
வாழ்க்கை வரலாறு படியுங்க. ஆனால் தாங்கள் ஒப்பு நோக்கு சரியில்லை. காமராஜ் படிக்காதவர் ஆனால் பண்பாளர்.தாய் நாட்டு விடுதலைக்காக பாடுபட்டவர்.அடுக்கு மொழி பேசத்தெரியாதவர். அவர் ஆண்ட காலத்தில் கல்வி தொழிற்சாலை விவசாயம் இவற்றைத் தம் கண்போன்று கருதி பாடுபட்டவர்.
அண்ணாத்துரை வாய்ப்பேச்சாளர்.வாய்ச்சவடால் வீரர். பதவிக்கு வரும்போதே நோய்வாய்ப்பட்டவர். தமிழகத்திற்காக எந்த திட்டத்தையும் அவர் கூறியதில்லை. வீணாக இந்தி எதிர்ப்பு என்று உணர்ச்சியைக்கிளறி தமிழர்களை வீணாக்கியவர். பானுமதிக்கும் இவருக்கும் தொடர்பு குறித்துப் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டபோது அவள் படிதாண்டாப் பத்தினியுமல்ல நான் முற்றும் துறந்த முனிவருமல்ல என்று கூறிய ஒழுக்க சீலர்.
அவரைப்பற்றி கருணாநிதியும் எம்ஜியாரும் உயர்வாகக்கூறி தங்களை வளாத்துக் கொண்டார்கள். அவ்வளவுதான்.

கத்தார் சீனு said...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மாணிக்கம் !!!
நீங்கள் சொல்லும் வாய்ச்சவடால் வீரரின் இறுதி ஊர்வலத்திற்கு வரலாறு காணாத மக்கள் வெள்ளம் எப்படி வந்தது???

vasan said...

"அண்ணா", பெரியாரிட‌மே இருந்துவிட்டால் ஏற்ப‌டும் லாப‌ ந‌ஷ்ட‌க் க‌ணக்குப் பார்த்து பிரிந்த‌ 'க‌ண்ணீர் துளி' இந்த‌ தி.மு.க‌ நிறுவ‌ன‌ர். க‌ண்ண‌தாச‌ன் சொன்ன‌து போல், ஒருவ‌ரைப் புக‌ழ்ந்தே அழிப்ப‌தில் அண்ணா கில்லாடி. திமுக த‌லைமை ஆச‌ன‌ம் பொரியாருக்கு ம‌ட்டும் தான், நான் வெறும் பொதுச் செய‌லாள‌ர் தான் என் ம‌க்க‌ளை ஏய்த்துவிட்டு, பொரியார் மேலேயே வ‌ழ்க்குப் போட‌ திரிந்த‌வ‌ர் அண்ணா. பள்ளிக் குழ‌ந்தைக‌ளை இந்தி எதிர்ப்பு போர‌ட்ட‌த்திற்கு இழுத்து, சில‌ரின் தீக்குளிப்பில் வெளிச்ச‌த்திற்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள் திமுக வின‌ர். த‌னித்த‌மிழ் நாடு இல்லையேல் சுடுகாடு என்ற‌வ‌ர், 1962 சீன‌ யுத்த‌திற்குப்பின் 'பிரிவினை வாத‌ம் பேசுப‌வர் மீது ம‌த்திய‌ அர‌சு தீவிர‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும்' என்ற‌வுட‌ன், மாநில சுயாட்சிக்கு கோஷத்துக்கு மாறிய‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் ப‌ற்றி பொரியார் ஒரு க‌ட்டுரையில் "ப‌த‌வி ஆசை வ‌ந்து, ஓட்டுப் பிச்சை எடுக்கிற‌ பிச்சைக்கார‌ங்க‌ளுக்கு, நொண்டிப் பிள்ளையும் கிடைச்ச‌ மாதிரி, ச‌ம்ப‌த்தும்‌ அங்க போய் சேர்ந்திட்டான்" என் எழுதினார். 1967 பொது தேர்த‌லில் திக‌ த‌விர‌ ம‌ற்ற‌ அன‌த்துக் க‌ட்சிக‌ளுட‌ன் (சுதந்திரா ராஜாஜி,க‌ம்யூனிஸ்ட்,தேவ‌ரின் பார்வ‌ர்ட் பிளாக், மாபொசி க‌ட்சி, முஸ்லீம்லீக். இன்ன‌பிற‌ இத‌ர‌ க‌ட்சிக‌ள்) கூட்டுச் சேர்ந்துதான், காங்கிர‌ஸைத் தேற்க‌டித்த‌ன‌ர். அண்ணா அப்போது போட்டியிட்ட‌து 'பாராளும‌ன்ற‌த்திற்கு' என்ப‌தை நினைவு கொள்ள‌ வேண்டும். அவ‌ர்க‌ளே எதிர்பாராத‌ தேர்த‌ல் முடிவு அது.ஆனால், நீங்க‌ளோ அண்ணாவின் அஸ்திவ‌ர‌ம் அப்ப‌டி என்கிறீர்க‌ள். "திமுக‌ கூட்ட‌ணி" வெற்றி பெற்ற‌து ஆனால், திமுக‌ ம‌ட்டும் த்னித்து ஆட்சி அமைத்து. இவ‌ர்க‌ளுக்கு சாத‌க‌மாய் இருந்த‌வை: 1) இந்தி எதிர்ப்பு போராட்ட‌ம்,2)க‌டும் அரிசிப் பஞ்ச‌ம்,3) 1962 சைனாவிட‌ம் தோற்ற‌ காங்கிர‌ஸின் அழுத்த‌தில் இரு‌ந்த‌ நேருவிற்கு துணையாய், காம‌ர‌ஜ‌ர் 'கே பிளான்' அறிவித்து த‌மிழ‌க் முதல்வ‌ர் ப‌த‌வியை ப‌க்த‌வச்ச‌ல‌த்திட‌ம் கொடுத்துவிட்டு டெல்லி சென்று விட்டார்.4) 1965 ல் பாகிஸ்தானுட‌ன் லால்ப‌ஹ‌தூர் சாஸ்திரி காலத்தில் நட‌ந்த‌ 2வ‌து காஷ்மீர் போர், 5) ரூபாய்க்கு மூன்று ப‌டி (6 கிலோ) அரிசி த‌ருவோம் என்ற‌ முத‌ன் முத‌ல் பொய் வாக்குறுதி த‌ந்த‌வ‌ர் அறிஞ‌ர் அண்ணாதான். (ரூபாய்க்கு மூன்று ப‌டி, இல்லையேல் முச்ச‌ந்தியில் ச‌வுக்க‌டி)
அண்ணாவின் நல்ல‌ குண‌மொனில், க‌ழ‌க‌த்தின‌ரின் குடும்ப‌த்தின‌ரை த‌ன் குடும்ப‌மாய் எண்ணிய‌ பாச‌க்காரர். முதல்வ‌ரானபின் பொறுப்பான‌வ‌ரானார். ம‌துவில‌க்கை ர‌த்து செய்து அத‌ன் வ‌ருவாயில் மூன்று ப‌டி அரிசி திட்ட‌த்தை தொட‌ங்க‌லாம் என்ற‌ அதிகாரிக‌ளின் கருத்தை, ம‌துவில‌க்கின் நன்மை க‌ருதி, வாக்கு த‌வ‌றினாலும், தமிழ‌க‌த்தின் த்ர‌த்தை காக்க‌ ர‌த்து செய்ய ம‌றுத்த‌ மாம‌னித‌ன். ஆனால், பொருந்த‌லைவ‌ர் காம‌ராஜ‌ர் யாரோடும் இணைத்து பேச‌ முடியா இம‌ய‌ம்.

vijayan said...

தமிழர்கள் எப்போதும் மின்னுவதெல்லாம் பொன்னென்று நம்புவர்கள்.அலங்கார பேச்சும், சினிமா கவர்ச்சியும் தான் அண்ணாதுரை அவகளின் இறுதி ஊர்வல கூட்டத்தின் ரகசியம்.

கத்தார் சீனு said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசன் அவர்களே.
உங்களின் நோக்குத்திரன் அற்புதம்...

கத்தார் சீனு said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு விஜயன் அவர்களே.

ravikumar said...

You cannot compare Mr.CNA & Mr.Kamraj
Mr.CNA spoiled the state by talking nicely, keeping false promise like Rice at 1 rupee and basement of devils like MK , MGR &JJ. But Mr. Kamraj never did such type of mistake projecting wrong people. Now see the condition of state after CNA & Co. All CNC associates are loose character having minimum of two or three families

கத்தார் சீனு said...

நன்றி ரவிக்குமார் அவர்களே....நான் ரெண்டு பேரையும் எங்கங்க ஒப்பீட்டேன்?? ரெண்டு பெருந்தலைவர்கள்னு சொன்னேன்...அவ்வளவுதான்...
தவிரவும்....எனக்கு ஒப்பீடு பிடிக்காது...என்னோட பழைய பதிவு ஒன்றினை பார்த்தால் உங்களுக்கே தெரியும்...(எப்படிலாம் விளம்பரம் பண்றடா சீனு....சூப்பரு..)

Anonymous said...

இந்தப் புத்தகம் பற்றிய அறிமுகம் மற்றும் விமர்சனத்துக்கு நன்றி நண்பரே.

- என். சொக்கன்,
பெங்களூரு.

Unknown said...

ஈரோட்டு பெரியவரால் வெளிச்சத்திற்கு வந்தவர்கள் அதிகம்.அதில் நாத்திகம் பேசி பேச்சுத்திறமையால் பாமர மக்களை கவர்ந்தவர் அண்ணா,புள்ளிவிவரங்களை கூறி பேசும் நாவலர்,மக்களின் பிரச்சனைகளை பேசும் மதியழகன்(அவர் தம்பி தான் கே.எ.கிருஷ்ணசாமி)பார்ப்பனர்களை ஆவேசமாக திட்டும் என்.வி.நடராசன்,சொல்லின் செல்வர்
ஈ வே.கி.சம்பத், இவர்களைத்தான் ஐம்பெரும் தலைவர்கள் என்று அழைப்பார்கள்.அதில் கருணாநிதி இல்லை.
காங்கிரெஸ் எதிர்ப்பு,ரேஷனில் அரிசி கிடைக்காதது,வேலை கிடைக்காதது என்று மக்களின் கோபத்தை அண்ணாவின் பேச்சு ஆட்சியில் அமர்த்தியது.இது அண்ணாவே எதிர்பார்க்காத ஒன்று. ம்ம்ம் இதெல்லாம் பேசி என்ன பயன்.ஈரோடு செல்ல காசில்லாதவர் இன்று ஆசியாவில் குறிப்பிடத்தக்க பணக்காரர்! எப்படி?ஈரோட்டுக்காரர் நிலம் உழைப்பு,அண்ணாவின் மார்கட் தந்திரம்!மு.க.அறுவடை செய்துகொடிருக்கிறார்! ஆனால் ஒன்று நிச்சயமையா! ஒரு மொழியை மைய்யப்படுத்தி(பூச்சாண்டி காட்டி) மாணவர்களை போராட்ட களத்தில் இறக்கி ஆட்சியை பிடித்து கோடி கொடியாக சம்பாதிப்பதற்கு வழி வகுத்த அண்ணா தீர்கதரிசி !! ஆனால் அவர் வளர்த்த மகன் பரிமளம் வறுமையில் இறந்துபோனார் என்கிறார்கள் வயித்தெரிச்சல் பிடித்த மக்கள்! அண்ணா நாமம் நல்லா விலை போகுது.

கத்தார் சீனு said...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு. சொக்கன் மற்றும் தமிழன் அவர்களே !!!

Ahamed irshad said...

Nice Review.. Good Sharing..

கானகம் said...

அண்ணா அலங்காரப் பேச்சு வீரரோ, இல்லை வெட்டிப்பேச்சு வீரரோ, சமூகம் அமைதியாய் இருக்க உண்மையிலேயே விரும்பியவர். தன்னை அவமதித்த பெரியாருக்காக முதல்வர் இடம் எப்போதும் காலியாகவே இருக்கும் எனச் சொன்னவர்.


நாத்திக வாதம் பேசிக்கொண்டு திரிந்த வெட்டிக்கூட்டத்தில், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என முழக்கமிட்டவர்.

ஓரினத்தை மட்டும் குறிவைத்துத் தக்குதல்கூடாது எல்லோரையும் அரவனைத்துச் செல்லவேண்டும் என்ற கொள்கையுடையவர்..

அவரது அற்புத பேச்சாற்றலுக்கு மயங்கிய கூட்டமே அவரது இறுதி ஊர்வலத்துக்கு வந்தது.

கிழக்குக்கு உங்கள் பதிவின் லின்க்கை அனுப்புங்கள்.

கத்தார் சீனு said...

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜெயகுமார்...
நீங்கள் அண்ணாவை பத்தி சொல்வது மிகச்சரி....

கத்தார் சீனு said...

நன்றி திரு அஹமது இர்ஷாத் ...