Wednesday, June 9, 2010

ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்


சமீபத்தில் விடுமுறைக்கு ஊருக்கு போய் இருந்த சமயம், ஒரு நாள் சென்னையிலிருந்து எங்க ஊர் விளாப்பாக்கத்திற்கு பேருந்தில் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றேன். எப்படியும் ஒரு 2-1/2 மணி நேரம் பயணம் இருக்குமே, என புத்தகம் எதாவது வாங்கலாம் என கடையை துழாவினேன். எப்பவும் போல ஆ.வி., குமுதம் மற்ற சில புத்தகங்களை பார்த்தேன். எல்லாம் ஏற்கனவே படித்து முடித்து இருந்ததால் கடையை சுத்தி சுத்தி பார்த்து கிட்டு இருந்தேன். கடைக்காரர் சற்றே எரிச்சலுடன், என்ன சார் 'பலான' புத்தகம் வேணுமா என்றார்?, நான் கொஞ்சம் டரியலாகி அவரை பார்க்க, என்ன தான் வேணும் என்றார்?. இல்ல வேற என்ன புத்தகங்கள் இருக்கு என்றேன்?. இந்த பக்கம் பாருங்க என்று கடையின் இன்னொரு இடது ஓரத்தை காண்பித்தார். எராளமான கிழக்கு பதிப்பக புத்தகங்கள் இன்ன பிற புத்தகங்கள் இருந்தன. என்ன வாங்கலாம் என யோசித்தபடியே இருக்கையில், ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம் என்ற புத்தகம் கண்ணில் பட்டது.(ஏற்கனவே பல பதிவுலக நண்பர்கள் இப்புத்தகத்தை பற்றி எழுதியவை படித்த ஞாபகம்) 100 ரூ என்றார் கடைக்காரர், ஆச்சரியமாக புத்தகத்திலும் அதே விலை தான் இருந்தது. புத்தகம் வாங்கி கொண்டு ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

புத்தகத்தை பிரித்து பார்க்கும் முன், முன் அட்டை, பின் அட்டை, முன்னுரை எல்லாம் படித்து முடிக்க, வண்டி கிளம்பியது. கே.ரகோத்தமன், என்ற முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி எழுதி இருந்த புத்தகம், 225 பக்கங்கள் இருந்தது.
படிக்க படிக்க புத்தகத்துள் மூழ்கி போனேன். பக்கத்தில் இருந்த எங்க வயதான ஊர்க்காரர்(படிக்காதவர்) ஒருவர், ரொம்ப பரிதாபமா, என்ன தம்பி பரீட்சைக்கு படிக்கறியா? என்றார். நான் ஆமாம், இல்லை போல தலை அசைத்து விட்டு தொடர்ந்து புத்தகத்தை படித்து கொண்டு இருந்தேன். ஒரு வழியாக ஆற்காடு வருகையில் 160 பக்கங்கள் வரை முடித்து இருந்தேன். அங்கிருந்து அடுத்த பேருந்து எங்க ஊருக்கு இன்னும் 45 நிமிடங்கள் இருந்தது. ஒரு தேனீர் கடையில் டீ சொல்லிட்டு, கடை பெஞ்சில் அமர்ந்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு வழியாக எங்க ஊர் பேருந்து சரியாக வரும் நேரம் புத்தகத்தை முடித்து இருந்தேன். வீட்டிற்கு சென்றடைந்தவுடன், ஆச்சர்யம் தாளாமல், மறுபடியும் முக்கியமான சில பக்கங்களை புரட்டி பார்த்தேன்.

புத்தகம் முடித்த பிறகு, ராஜிவ் கொலை வழக்கு குறித்த பல மர்மங்கள் ஒருளவு தெளிவு பெற்று தான் இருந்தது. இக்கொலை வழக்கின் விசாரணை எப்படி நடந்தது? எப்படியெல்லாம் ஆதாரங்கள் சேகரித்து கொலையில் சம்பந்தபட்ட பல பேரை கைது செய்தனர், விசாரணை செய்தனர் என கொஞ்சம் விளக்கமாகவே எழுதி இருந்தனர். நிறைய தகவல்கள் உள்ளது புத்தகத்தில், எனினும் இன்னும் கொஞ்சம் உண்மைகள் இப்புத்தகத்தில் வெளி வர வில்லை என்றே நான் நம்புகிறேன்(ஆசிரியர் சொல்வது போல, பல அரசியல் காரணங்களாக இருக்கலாம்) அனாலும் நிறைய புதிய தகவல்கள் உள்ளது. என்ன காரணங்கள், எப்படி திட்டமிட்டனர், யார் யார் எல்லாம் ஈடுபட்டனர் என்று அருமையாக விளக்கப்பட்டது. இதை ஒரு தகவல் புத்தக நடையில் எழுதாமல், கொஞ்சம் கதை நடையில் எழுதி இருப்பது விறுவிறுப்பை கூட்டுகின்றது.

எந்த அளவிற்கு நமது உளவு துறை வேலை செய்து கொண்டு இருக்கிறது என்பதை படிக்கையில், நிஜமாகவே நம் நாடு குறித்த பல சந்தேகங்கள் மற்றும் பயங்கள் வரத்தான் செய்கிறது. அது மட்டும் இல்லாமல், விடுதலை புலிகளின் திட்டமிடல், அவர்களின் உளவுத்துறை மிக துல்லியமாக வேலை செய்ததை இந்த புத்தகத்தில் ஆசிரியர் அழகாக விளக்கி உள்ளார். எந்த ஒரு சின்ன தடயமும் இல்லாமல் வழக்கை துவங்கி, ஹரிபாபு புகைபடத்தில் இருந்து, சுபா சுந்தரத்தை பிடித்து, பின்பு பலவாறு தேடி எப்படி நளினி மற்றும் முருகனை பிடித்தனர், சிவராசன் எப்படி இறந்தான் என மிக எளிய நடையில் சொல்லப்பட்டு உள்ளது. பல ஆதார கடிதங்கள், புகைப்படங்கள் (கருப்பு/வெள்ளை கொஞ்சம் வெறுப்பேற்றுகிறது, என்ன செய்ய? 100 ரூபாய்க்கு அவ்வளவுதான் கிடைக்கும் போல) இணைக்க பட்டுள்ளது.

பிரபாகரன், பொட்டு அம்மான், கிட்டு, பத்மநாபா கொலை வழக்கு, நளினி-முருகன் காதல், தமிழ் நாட்டின் அரசியல் சக்திகள், வைக்கோ, கருணாநிதி, சி.பி.இ கார்த்திகேயன், மரகதம் அம்மா, வாழப்பாடி, ஸ்ரீபெரும்புதூர், சிவராசன், ஹரிபாபு, சுபா சுந்தரம், சுபா, தனு, சின்ன சாந்தன், பெங்களூரு(அப்போ பெங்களூர்) ரங்கநாத், கோடியக்கரை சண்முகம், அமைதி படை, LTTE, சாத்தனின் படைகள் என பல விஷயங்கள் பற்றி அற்புதமாக சொல்லி இருக்காங்க. கார்த்திகேயன் அவர்களை பகிரங்கமாகவே பல இடங்களில் ஆசிரியர் குற்றம் சாட்டுகிறார், முக்கியமாக பல அரசியல் தலைவர்களை விசாரிக்காமல் விட்டதற்காக! இந்த புத்தகம் தொகுப்பிலும் சில அரசியல் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன், ஏன் என்றால் சில இடங்களில் மர்மம் முழுமையாக விலக வில்லை. ஆனாலும் புத்தகம் மிக விறுவிறுப்பாக உள்ளது என்ற உண்மையை மறுக்க இயலாது.

வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படித்து பாருங்கள். வைத்த கண் வாங்காமல், ஒரே மூச்சில் படித்து முடித்து விடலாம்.

3 comments:

Unknown said...

வாழ்த்துக்கள். தமிழ் வலைத்தளத்தில் ஒரு புதிய பதிவர். நிறைய எழுதுவதற்கு வாழ்த்துக்கள்.

ரமேஷ்.V

Unknown said...

மிக அருமையான முயற்சி. நன்றாக இருந்தது தங்களின் ப்ளாக்.
வாழ்த்துகள்.

அன்புடன்
சரவண சேது

கத்தார் சீனு said...

@ ரமேஷ்
@ சேது

நன்றிகள்...
தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் !!!